தடுப்பு மருந்துகள் வாங்க 6 பில்லியன் டொலர்கள், வி நியோகிக்க 3 பில்லியன் டொலர்கள் ஆபிரிக்காவுக்குத் தேவை!
ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 6 பில்லியன் டொலர்களும், அவைகளைக் கொண்டுபோய்த் தேவையான இடங்களில் சேர்ப்பதற்காக மேலும் 3 பில்லியன் டொலர்களும் தேவையென்று ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி கணிக்கிறது. இது ஆபிரிக்கக் கண்டத்தின் 1.3 பில்லியன் மக்களில் 60 விகிதத்தினருக்கான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான செலவுக்கான தொகையாகும்.
உலகச் சந்தையின் சக்திகளான தேவைகளின் பணபலமும் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் தொகையும் தான் விலையைத் தீர்மானிக்குமானால் ஆபிரிக்க நாடுகளுக்கான தடுப்பு மருந்துகளை 100 பில்லியன் டொலர்கள் கொடுத்தும் வாங்கிக்கொள்ள முடியாது. ஏனெனில் நிறுவனங்கள் தமக்கு முன்பணம் கொடுத்தவர்களுக்கே தடுப்பு மருந்துகளை முதலில் கொடுக்கப்போகின்றன.
கொவக்ஸ் என்ற உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு உண்டாக்கிய ஒன்றியம் மூலம் ஆபிரிக்காவுக்கும் தேவையான தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களின் கணிப்புப்படி 2 பில்லியன் தடுப்பு மருந்துகள் 2021 இல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவிருக்கின்றன. அவையில் பங்கீடாக ஆபிரிக்காவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது இதுவரை தெரியவில்லை என்கிறது ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி.
எனவே,பணக்கார நாடுகள் தமது தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்யச் செய்திருக்கும் ஒப்பந்தங்களிலிருந்து மருந்துகளைப் பெற ஆபிரிக்க மற்றும் உலகின் அபிவிருத்தி நாடுகள் கோரவேண்டும் என்கிறது அபிவிருத்தி வங்கி. அதன் மூலம் ஆகக்கூடியது 2021 இன் இரண்டாம் காலாண்டிலாவது ஆபிரிக்க நாடுகளின் அரசுகள் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்