தனது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா மீது பாய்கிறது சீனாவின் கண்காணிப்புகள்.
தனது பெரும் பலத்தை வைத்து நாட்டின் பொருளாதாரச் சந்தையில் மற்றைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் குறிப்பிட்டு “அலிபாபா” மற்றும் அதன் சகோதர நிறுவனமான “அண்ட் குரூப்” ஆகியவை மீது விசாரணைகள் நடத்த ஆரம்பித்திருக்கிறது சீனாவின் வர்த்தகப் போட்டிக் கண்காணிப்பு திணைக்களம்.
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான 58 பில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ஜக் மா வின் நிறுவனமான அலிபாபா உலகின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இணையத் தளத்தைக் கொண்டதாகும். அந்த நிறுவனத்தின் பொருளாதார வங்கியும், முதலீட்டு நிறுவனமுமான அண்ட் குரூப் சீனாவிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் பலவித முதலீட்டு, வாடிக்கையாளர் வங்கிச் சேவைகளில் ஈடுபடும் நிறுவனமாகும்.
அலிபாபா நிறுவனம் தனது இணையத் தளத்தில் விற்க வரும் சிறிய நிறுவனங்கள் தமது பொருட்களை மற்றைய இணையத்தளங்களில் விற்கலாகாது என்று கட்டுப்படுத்துவதைப் பற்றிச் சீனா ஏற்கனவே அவர்களை எச்சரித்திருக்கிறது. அதேபோலவே அவர்களுடைய வங்கிச்சேவைகளும் தம்மிடம் சேவை பெறுபவர்களுக்குப் பிரத்தியேக கட்டுப்பாடுகளைப் போட்டு வருகிறதா போன்றவைகளை விசாரிக்கப்போகிறது சீனா.
“நாம் அரசுடன் சகல வழிகளிலும் அவர்களுடைய கண்காணிப்பு ஆராய்வுகளுக்கு ஒத்துழைப்போம்,” என்று அலிபாபா நிறுவனம் அறிக்கை விட்டிருக்கிறது. சமீப காலமாகச் சீனா தனது நாட்டின் சில பாரிய நிறுவனங்களைத் தமது துறையில் மற்றைய நிறுவனங்களை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றஞ்சாட்டித் தண்டங்களை விதித்து வருகிறது. இதே போன்ற குற்றச்சாட்டுகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்ரேலியா நாடுகளில் மைக்ரோசொப்ட், பேஸ்புக் மற்றும் அல்பவேட்/கூகுள் நிறுவனங்களின் மீதும் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்