இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!
தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000 Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே மோசமாக கொவிட் 19 ஆல் தாக்கப்பட்ட ஈரானிய அரசின் விபரங்களின்படி 1.2 மில்லியன் மக்கள் சுகவீனமடைந்திருக்கிறார்கள். இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 55,000 ஆகியிருக்கிறது. மனிதாபிமான அமைப்பு சிகப்புப் பிறையின் தலைவர் கரீம் ஹம்மத்தி, வரும் வாரங்களில் குறிப்பிட்ட நன்கொடைத் தடுப்பு மருந்துகள் கிடைக்குமென்று தெரிவித்திருக்கிறார். அதைத் தவிர சீனாவிடமிருந்தும் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகள் கிடைக்கவிருப்பதாகவும், மருந்துகள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டத்தின் மூலம் ஈரானுக்கு மருந்துகளை வாங்க முடியுமெனினும் “அமெரிக்க வங்கிகள் மூலம் நாம் தடுப்பு மருந்துகளுக்காகப் பணம் செலுத்தமாட்டோம். அவர்களை நம்பமுடியாது, எங்கள் பணத்தைச் சூறையாடிவிடக்கூடும்,” என்று ஈரானியத் தலைவர் ஹஸன் ரூஹானி சனியன்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேசமயம் ஈரானிய இராணுவத் தலைமையிலிருந்தும் “நாங்கள் எந்த வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளையும் நம்பப்போவதில்லை, நீங்களும் நம்பக்கூடாது,” என்று மக்களை நோக்கி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஈரான் தனது நாட்டிலேயே ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி வருவதாகவும் அதன் மூன்றாம் கட்ட மனித ஆராய்ச்சிகள் நடக்கப்போவதாகவும் அரசு அறிவிக்கிறது. அந்த மருந்தைத் தயாரிக்கும் உரிமை நாட்டின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா கமேனியின் பங்குகளைக் கொண்ட மருத்துவ நிறுவனமென்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்