வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை.
கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய பத்திரிகையாளர்களில் ஒருவர் ஷாங் ஸான்.
மக்களிடையே திகிலைப் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட 37 வயதான முன்னாள் வக்கீலான ஷாங் ஸான் இன்று திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜாராக்கப்பட்டு 4 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். இந்த விசாரணையை நேரில் காண முற்பட்ட வெளிநாட்டு ராஜதந்திரிகளெவரும் நீதிமன்றத்தினுள்ளே அனுமதிக்கப்படவில்லை.
ஷாங் ஸான் வுஹானின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும், மருத்துவசாலையில் ஆரம்பக்கட்டத்தில் திகிலாலும், பயத்தாலும் பாதிக்கப்பட்ட மருத்துவ சேவையாளர், நோயாளிகள் பற்றியெல்லாம் படங்களை எடுத்து இணையத்தளங்களில் பரவலாக எழுதிவந்தார். கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஷாங் ஸான் ஜூன் மாதமளவில் உண்ணாவிரதம் ஆரம்பித்திருந்தார். எனவே அவருக்குக் குளாய் வழியாகக் கட்டாயமாக உணவூட்டப்பட்டு வந்ததாக அவருக்காக வாதாடிய சீன வக்கீல்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக எழுதுவதையும், நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வமான அறிக்கைகளை விமர்சிப்பவர்களையும் சீனா பல வகைகளிலும் தண்டிப்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. கொரோனாத் தொற்றுக்களையும், அதன் ஆபத்துக்களைப் பற்றியும் ஆரம்பக் கட்டத்தில் கேள்வியெழுப்பிய மருத்துவர்களும், ஊழியர்களும் கூட ஏற்கனவே கண்டிக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்