இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.
“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப் ஷரீபி.
ஆப்கானிஸ்தான் போலவே உலகெங்கும் நிலைமை பத்திரிகையாளர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக ஆகிவருகிறது என்கிறார்கள் “எல்லைகளில்லாத பத்திரிகையாளர்கள்” (Reporters without Borders )அமைப்பினர். இறந்துபோன சுமார் 50 பத்திரிகையாளர்களில் 40 பேராவது குறிபார்க்கப்பட்டு மிக அருகிலிருந்து துப்பாக்கியாலோ, குண்டு வெடிப்பாலோ தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நீண்டகாலமாகவே பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான ஆப்கானிஸ்தானில் இவ்வருடம் பெண் பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவது, கொல்வதும் புதிய தொல்லையாகியிருக்கிறது என்கிறார் நஜீப் ஷரீபி.
பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக மீண்டும் மெக்ஸிகோவும் அதையடுத்து இந்தியாவும் இருக்கின்றன. 2010 லிருந்து வருடாவருடம் ஐந்து பத்திரிகையாளர்களாவது கொல்லப்படும் இந்தியாவில் இவ்வருடம் நாலு பேர் உள்ளூர் குற்றவாளிக் குழுக்களினால் கொல்லப்பட்டிருகிறார்கள். மெக்ஸிகோவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையோ எட்டு.
அதையடுத்து ஈராக், பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வருடம் ஈரானில் ஒரு பத்திரிகையாளர் கொலைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்