மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஆரம்பிக்கிறது சிறீலங்கா.
கொவிட் 19 ஏற்படுத்திய தொல்லைகளால் உலகின் பல நாடுகளைப் போலவே தனது எல்லைகளையும் சுற்றுலாவுக்காக மூடியிருந்த சிறீலங்கா எட்டு மாதங்களின் பின்னர் எல்லைகளை மெதுவாக நீக்குகிறது.
மாத்தளை சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் வந்திறங்கியது மூடப்பட்டிருந்த எட்டு மாதத்துக்குப் பின்னர் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத் துறையின் முயற்சித் திட்டமாகும். “ஜனவரி மாத நடுப்பகுதி வரை அந்தக் குழுவினர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுலா தலங்களுக்கு மட்டும் விஜயம் செய்வார்கள்,” என்று கூறினார் சுற்றுலா அமைச்சர் ரணதுங்க.
முதலில் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படப் போவதாகக் கூறப்பட்டிருந்த சிறீலங்காவின் விமான நிலையங்கள் பின்னர் டிசம்பர் 26 இல் திறக்கப்படப் போவதாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், நாட்டில் கொரோனாத் தொற்றுக்களின் பரவல் சுமார் 41,000 பேரைத் தாண்டி சுமார் 191 பேரின் உயிரைக் குடித்திருப்பதால் அவை தொடர்ந்தும் பின்போடப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்