வட சிரியாவில் பெண்களும், சிறார்களும் வாழும் ஒரு நகரம், அல் ஹோல் சிறை முகாம்.

சிரியாவின் வடக்கில் இருக்கும் அல் ஹோல் சிறை முகாம் உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.

 சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரை மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பலத்துடன் போர் நடாத்திக் கொடூரமான முறையில் பலரைக் கொன்றொழித்த ஐ.எஸ் என்றும் அல் டௌலா அல் இஸ்லாமியா என்றழைக்கப்பட்ட இயக்கத்தின் வீழ்ச்சியடைந்தபோது சிரியாவின் குர்தீஷ் இயக்கங்களால் கைது செய்யப்பட்ட இயக்கப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இச்சிறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.

பொருளாதார வசதிகள் அதிகம் இல்லாத குர்தீஷ் பிராந்திய நிர்வாகத்தினரால் அச்சிறைமுகாமில் ஒழுங்கான பாதுகாப்பை நிர்வகிக்க முடியாதிருப்பது மட்டுமன்றி அங்கே வாழ்பவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளையும் கொடுக்க முடிவதில்லை என்று அங்கே பார்வையிடச் சென்ற பல பத்திரிகையாளர்களின் ஒன்றுகூடிய கருத்தாகும். குர்தீஷ் நிர்வாகமும் அதை மறுக்கவில்லை.

ஐரோப்பாவிலிருந்து இஸ்லாமிய காலிபாத் அமைக்கும் கனவில் போரிடப் போன பல பெண்களும் கூட இருக்கிறார்கள். எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லாமல் அங்கே பிறந்த அவர்களின் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பெரும்பாலான அப்பெண்கள் இப்போதும் தங்கள் தீவிரவாதக் கோட்பாடுகளில் நம்பிக்கையுடன் தமது பிள்ளைகளும் அதேபோன்ற இரத்த வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள் என்பதும் அங்கே விஜயம் செய்த பத்திரிகையாளர்களின் கவனிப்பாக இருக்கிறது.

அங்கே திட்டமிட்டு ஊட்டப்படும் தீவிரவாதத்தையும் அதன் எதிர்கால விளைவுகளையும் புரிந்துகொண்டாலும் அதைத் தடுக்கும் வசதியும் குர்தீஷ் நிர்வாகத்திடம் இல்லை. அப்பெண்களில் ஒரு சிலர் ஐரோப்பாவுக்குத் திரும்ப விரும்பினாலும் ஏற்றுகொள்ளப் பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை, அப்படித் தயாராக இருந்தாலும் குழந்தைகளின் மற்றப் பெற்றோர், அவர்களுடைய உறவினர்களின் அனுமதியின்றி அவர்களால் வெளியேறவும் முடியாது. கடந்த இரு மாதங்களில் மட்டும் அம்முகாமில் 25 பேர்களுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அப்பெண்களையும் பிள்ளைகளையும் பிரித்து அங்கே தீவிரவாதம் வளராமல் கவனித்து, பிள்ளைகளுக்கு வேண்டிய கல்விக்கூடங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்யப் பணக்கார நாடுகளிடம் நிதிகேட்டு நிற்கிறது குர்தீஷ் நிர்வாகம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *