யேமனின் புதிய அரசாங்கத்தினர் சவூதியிலிருந்து வந்திறங்கியதைக் குண்டுகளால் தாக்கி வரவேற்பு.
யேமனில் பல வருடங்களாகப் பிரிந்து போராடிவந்த இரண்டு போராளிகள் குழுவினர் இணைந்து இரண்டு வாரங்களின் முன்னர் ஏற்படுத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சவூதியிலிருந்து யேமனிலிருக்கும் ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்.
ஏடன் விமானத்தில் அவர்கள் வந்திறங்கியபோது விமான நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன.
அத்தாக்குதல்களில் சுமார் 20 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேருக்கு மேலும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து ஏடனிலிருக்கும் ஜனாதிபதி மாளிக்கைக்கு அமைச்சர்கள் பயணித்தார்கள். முதல் குண்டு வெடிப்புத் தாக்குதல்களின் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஜனாதிபதி மாளிகையை அடுத்தும் குண்டுகள் விழுந்தன. பிரதமர் மாயின் அப்துல்மாலிக், மற்றும் யேமனுக்கான சவூதியத் தூதர் ஆகியோர் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் மேற்பார்வையில் சர்வதேச அங்கீகரிப்புப் பெற்ற ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசாங்கத்தில் யேமனின் இன்னொரு முக்கிய போராளிக் குழுவினரான ஹூத்தி இனத்தினர் சேர்ந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தவிர யேமனில் அல்-கைதா, ஐ.எஸ் ஆகிய குழுவினரும் வெவ்வேறு பிராந்தியங்களில் பலம் பெற்றிருக்கிறார்கள். தாக்குதல்களுக்கான பொறுப்பை இதுவரை எவரும் எடுத்துக்கொள்ளவில்லை.
சாள்ஸ் ஜெ.போமன்