கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருக்கும் மூன்று தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர்.
கேரளாவின் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு ஆகிய மூன்று சட்டமன்றத்தொகுதிகள் தமிழக – கேரள எல்லையிலிருக்கின்றன. இப்பகுதிகளில் செறிவாக வாழும் தமிழர்கள் வாக்குகள் அப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மிக முக்கியமென்பதால் அங்கே தமிழில் வாக்கு வேட்டை நடந்து வருகிறது.
மாவட்டத்தின் பத்துப் பஞ்சாயத்தில் 90 % தமிழர்கள் வாழ்கிறார்கள். தேவிகுளத்தில் 65% , உடும்பஞ்சோளாவில் 22% , பீர்மேட்டில் 35% , தமிழ் வாக்காளர்களுண்டு. முன்னாறு, தேவிகுளம், மறையூர், காந்தளூர், குமளி, நெடும்காண்டம், வண்டிப்பெரியார் போன்ற ஊர்களில் வேட்பாளர்கள் தமிழில் வாக்கு வேட்டையாடுவதைக் காணலாம்.
அஇஅதிமுக, திமுக, மக்கள் நீதி மையம், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகியோர் அந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருக்கும் அ இ அதிமுக தேவிகுளம் தொகுதியில் தேசிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்