“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய டுவிட்டர் தவறியதால் இனிமேல் அந்தச் செயலியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாக Roskomnadzor தெரிவித்திருக்கிறது. அதன் மூலம் ரஷ்யர்களை ஆபத்தான நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்ற விரும்புவதாக நாட்டின் ஊடகங்களைக் கண்காணிக்கும் திணைக்களம் [Roskomnadzor] அறிவித்திருக்கிறது. 

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் ரஷ்யாவில் பிரபலமானவை. முக்கியமாக நாட்டின் மத்திய அரசை விமர்சிக்கும் மேற்கு ஆதரவு எதிர்த்தரப்பினர் அவைகளைப் பாவித்து வருகின்றார்கள். சமீப மாதங்களில் புத்தினையும், அவரது ஆட்சியின் ஊழல்களையும் வெளிப்படுத்தி விமர்சிக்கும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவு ஊடகங்கள் பெரும்பாலும் இவையே. எனவே, ரஷ்ய அரசு அவர்களிடம் அந்த விமர்சனக் கணக்குகளை முடக்கச் சொல்லிக் கடும் தொந்தரவு கொடுத்து வருகிறது. ஆனால், அவைகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

ரஷ்ய அரசு நாட்டினுள் செயற்பட்டு வரும் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் பல புதிய சட்டத் திருத்தங்களைத் தயார் செய்து வருகின்றன. அத்துடன் ரஷ்ய ஊடகங்களைச் செயற்படாமல் செய்யும் வெளிநாடுகளின் ஊடகங்களை ரஷ்யாவில் தண்டிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. 

அதே சமயம் சில வருடங்களாகவே வெளிநாட்டு ஊடுருவல், தீவிரவாதம், பண்பாட்டைக் கெடுக்கும் விடயங்களைத் தடுப்பதற்காக என்று குறிப்பிட்டு ரஷ்யாவின் சொந்த ஊடகங்கள், செயலிகளைத் தயாரிப்பதில் தீவிரமாக இயங்குகிறது. அதன் மூலம் இணையத்தளத்தின் உள்ளீடுகளை ரஷ்யாவிலேயே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது புத்தினின் திட்டமாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *