மியான்மாரின் இரத்தினக் கற்களை விற்றுச் சம்பாதித்த இராணுவத்தினரை வெளிநாட்டுக் கட்டுப்பாடுகள் என்ன செய்யும்?
அமெரிக்கா, ஐரோப்பா உட்படப் பல நாடுகள் ஆட்சியைக் கவிழ்த்த மியான்மார் இராணுவ உயர் தளபதிகள் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகள் விதித்து வருகின்றன. ஆனால், மியான்மாரில் அந்த இராணுவத்தினரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடும் மக்களின் மீதான இராணுவத்தின் நடவடிக்கைகள் மேலும் இரத்தம் குடிப்பவையாக அதிகரித்தே வருகின்றன.
மியான்மாரின் இயற்கை வளங்கள், உடைத் தயாரிப்புகள், சுற்றுலாத் துறை முதல் அதியுயர்ந்த விலைக்கு உலகெங்கும் விற்கப்படும் நாட்டின் இரத்தின,மாணிக்க, வைரக் கற்களின் விற்பனையையும் நாட்டின் இராணுவத் தலைமைத்துவமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் நாட்டைக் கைப்பற்றியது முதல் மெதுவாக அவற்றின் வருமானங்களைத் தங்கள் பைகளுக்குள்ளேயே போட்டுக்கொள்கிறார்கள்.
மியான்மார் உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கற்கள் ஏற்றுமதியாளராகும். 2011 முதல் அந்தப் பொருளாதாரத்தைத் தனது கைகளுக்குள்ளேயே எடுத்துக்கொண்டிருக்கிறது மியான்மார் இராணுவம். அவர்களுக்கு உதவுகிறவர்கள் மியான்மாரின் போதைப்பொருள் வியாபாரிகளாகும்.
மியான்மாரிலிருந்து சீனாவுக்குள் கொண்டு செல்லப்படும் அம்மாணிக்கக் கற்களின் சர்வதேச விற்பனையைச் சீனா செய்கிறது. எனவே உலக நாடுகளின் பொருளாதார, வர்த்தகத் தடைகளால் மியான்மாரின் இராணுவத்தினரைக் கடிக்க இயலாது. மியான்மாரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அவ்விலையுயர்ந்த கற்களுக்குப் பதிலாக சீனா தனது இராணுவப் தளபாடங்களை மியான்மாருக்குக் கொடுக்கிறது.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திடம் நாட்டின் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டுமென்ற ஒப்பந்தத்தின்படி தேர்தலில் வென்ற அரசிடம் ஆட்சியைக் கொடுப்பது இராணுவத்தினரின் எண்ணத்தில் இருக்கவில்லை. ஔன் சான் சூ ஷீயின் அரசாங்கம் திட்டமிட்டபடி பதவி ஏற்றிருக்குமானால் இராணுவத்தலைமை ஒதுக்கப்படும், அவர்கள் கடந்த 50 வருடங்களாகச் சூறையாடிவந்த சொத்துக்களுக்குப் பதில் சொல்லவேண்டிவரும் என்ற எண்ணத்திலேயே இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது என்று ஆசிய அரசியல் பற்றி ஆராய்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மியான்மாரின் இராணுவத் தளபதிகள் 2016 இல் ஸ்தாபித்துக்கொண்ட இரண்டு அமைப்புக்கள் [MEHL (Myanmar Economic Holdings ltd) och MEC (Myanmar Economic Cooperation) ] மூலமாக 193 நிறுவனங்களை உண்டாக்கி நாட்டின் வங்கிகள், போக்குவரத்து நிறுவனங்கள், சுரங்கங்கள் மற்றும் உடை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ நிர்வகித்து வருகிறார்கள். இவைகளின் முக்கிய நிர்வாகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் இராணுவத் தளபதிகள் அதிகமாகத் தங்களை வெளியே காட்டிக்கொள்வதில்லை.
2016 இல் இராணுவம் நாட்டின் ஆட்சியை ஔன் சான் சூ ஷீயின் அரசிடம் ஒப்படைத்தபோது குறிப்பிட்ட நிறுவனங்களைப் பங்குகளாக்கி இராணுவத் தலைமையின் கைகளில் போட்டுக்கொண்டது. அந்த நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சீனரைத் தவிர, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளாகும்.
சமீபத்தில் மியான்மார் மக்களின் மீது இராணுவத் தலைமை எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தாம் மியான்மாரின் இராணுவத் தலைமையுடன் தொடர்புகளை வெட்டிக்கொள்வதாக அறிவித்திருக்கின்றன. சீனாவும், சிங்கப்பூரும் தொடர்ந்தும் மியான்மார் இராணுவத்துடன் வர்த்தகக் கூட்டுறவு வைத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்