இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.
11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப் பறக்க அந்த நாடு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததே என்று குறிப்பிடப்பட்டது. அதனால் கோபமடைந்த பிரதமர் நத்தான்யாஹூ உடனடியாக ஜோர்தான் விமானங்களுக்கு இஸ்ராயேல் வான்வெளியை மூடச் சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது.
நத்தான்யாஹுவின் உத்தரவை ஏற்றுக்கொண்டு ஒரு மணிக்குள் அதைச் சகல அதிகாரங்களுக்கும் அறிவித்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர். அந்த உத்தரவின்படி ஜோர்தான் மூலமாக வரும் எந்த விமானமும், ஜோர்தானிய விமானம் இல்லாவிட்டாலும் இஸ்ராயேலுக்கு மீதாகப் பறக்க முடியாது போயிருக்கும். அப்படியொரு முடிவை எடுப்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகும்.
உண்மையில் ஜோர்தான் தனது வான்வெளியில் நத்தான்யாஹு பயணிப்பதை மறுக்கவில்லை. ஜோர்தானின் அம்மான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸின் விமானம் இஸ்ராயேலுக்குச் சென்று அங்கிருந்து நத்தான்யாஹூவை ஏற்றிச் செல்வதையே தடுத்திருந்தது. அதற்குக் காரணம் தொழில்நுட்பப் பிழைகளே என்று எமிரேட்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.
எப்படியோ, நிலைமையின் தவறைப் புரிந்துகொண்ட நத்தான்யாஹூ சுமார் 90 நிமிடங்களுக்குள் தான் முதலில் கொடுத்த உத்தரவை ரத்து செய்துவிட்டார். அதிர்ஷ்டவசமாகப் பிரச்சினைகள் எதுவும் உண்டாகாவிட்டாலும், நத்தான்யாஹூ செய்தது மிக மோசமான தவறு என்று பலரும் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறார்கள். நத்தான்யாஹூவோ அதைப் பெரிதுபடுத்தாமல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுவிட்டு அதைப் பற்றித் தொடர்ந்து எதுவும் பேசவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்