அமெரிக்காவுக்கு அனுப்பப்படப்போகும் வட கொரியர் : மலேசியா முறித்துக்கொள்ளும் வட கொரியாவுடனான உறவுகள்.
தனது நாட்டிலிருக்கும் வட கொரியத் தூதுவராலயத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவரும் 48 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று மலேசியா உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளும் முடிவின் பின்னர் மலேசியா எடுத்திருக்கும் முடிவு இதுவாகும்.
“பக்கத்து நாடுகளுடன் நட்பாகப் பழகத் தெரியாத, ஒழுங்கான தொடர்புகளில் ஈடுபடாத, பரஸ்பரம் மதிப்புக் கொடுக்கத் தெரியாத நாடான வட கொரியாவுடன் எவ்வித ராஜதந்திர உறவுகளையும் வைத்திருப்பதில் அர்த்தமில்லை,” என்கிறது மலேசியா.
“மலேசியா தனது நடவடிக்கைக்கான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும்,” என்று எச்சரிக்கிறது வட கொரியா.
திட்டமிட்டுக் கறுப்புப் பணத்தைக் கையாண்டு வந்ததற்காக மலேசியாவில் வாழும் வட கொரியரொருவரை மலேசிய நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தண்டித்து அவரை அமெரிக்காவிலும் அதே குற்றத்துக்காக நீதிமன்றத்தில் நிறுத்த விரும்பும் அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறது மலேசியா. அதை எதிர்த்து வட கொரியா மலேசியாவுடனான சகல தொடர்புகளையும் வெட்டிக்கொண்டு வட கொரியாவிலிருக்கும் அவர்களுடைய தூதுவராலயத்தையும் மூடுவதாகச் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
வட கொரியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய நட்பு நாடுகளில் ஒன்றாக மலேசியா இருந்தது. வட கொரிய ஜனாதிபதியின் சகோதரன் கிம் யொங் நம்மை மலேசிய விமான நிலையத்தில் வைத்துக் வட கொரிய உளவாளி கொலை செய்தார். 2017 இல் நடந்த இந்தச் சம்பவம் அவ்விரண்டு நாடுகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது.
அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மலேசியாவில் வாழும் நிறுவன அதிபரான முன் சோல் முயொங் தான் முதல் தடவையாக அமெரிக்காவின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படப்போகும் வட கொரியராகும். மலேசியாவிலிருக்கும் இவர் தனது நிறுவனம் மூலம் வட கொரிய அதிபருக்காக அமெரிக்காவில் நடாத்தப்படும் கறுப்புச் சந்தை வியாபாரங்களின் கறுப்புப் பணத்தைக் கையாண்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். அப்பணம் மூலம் அவர் சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருட்களை வாங்கி வட கொரிய அதிபர் குடும்பத்தினருக்கு அனுப்புவதாகவும் அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்படுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்