ஒத்தமானிய கலாசாரம் ஒட்டியிருக்கும் கிரேக்க நாட்டின் ரூடெஸ் தீவு – வெற்றிநடை உலாத்தல் கிரீஸ் பக்கம்

வெற்றிநடையில் இந்த வார உலாத்தலில் கிரேக்க நாட்டின் ரூடெஸ் பழைய நகரப்பக்கம் இடம்பிடித்தது. பாரம்பரியமும் உல்லாசமும் சுவாரஷ்யமும் மிகுந்த இந்த இடம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதன இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வார உலாத்தலில் அந்த நகரத்தின் அரிய பல தகவல்களோடு பயணம் செய்தது வெற்றி நடை. இந்த உலாத்தல் பகிர்வில் சுவீடனிலிந்து சாள்ஸ் ஜே , டென்மார்க்கிலிருந்து லிங்கதாசன்,மற்றும் லண்டனிலிருந்து யோகாதினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இணைப்பு கீழே 👇👇.

ரூடெஸ் தீவு,அதன் பழைய நகரம், மற்றும் கிரேக்க நாட்டின் வரலாற்று அம்சங்களை மேலும் எழுதுகிறார் சாள்ஸ் ஜே 👇👇

1830 இல் தன்னை ஆக்கிரமித்திருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்திலிருந்து விடுதலை பெற்ற நாடு கிரீஸ். சுமார் 1300 களில் துருக்கிய பிராந்தியங்கள் ஒன்றிலிருந்து [அனதோலியா] ஆரம்பித்து சுமார் 600 வருடங்கள் சுற்றுவட்டத்திலிருந்த நாடுகளையும் சில ஐரோப்பிய நாடுகளையும் தனக்குள் அடக்கிய சாம்ராஜ்யம்தான் ஒத்தமான் சாம்ராஜ்யம்.

முதலாம் உலகப் போரின்போது வீழ்ச்சியடைந்த ஒத்தமானிய சாம்ராஜ்யம் 1922 இல் துருக்கியை இழந்தபின் 1923 இல் பிறந்த நாடுதான் இன்றைய துருக்கி.

ரோடோஸைப் பொறுத்தவரை ஒத்தமானிய ஆட்சிக்காலம் அதன் சகல பாகங்களிலும் கலாச்சாரம், கட்டிடக் கலைகள் ஒட்டிக்கிடக்கிறக்கிறது. எனவே அந்த நிலைமைக்கான போரைப் பற்றி குறிப்பிடுவது அவசியம்

இக்கோட்டையின் பழைமையும், விசேடமான உள்ளீடுகளும் மிகவும் முக்கியமானதால் இவை .நாவின் யுனெஸ்கோ அமைப்பினால் உலகத்துக்குப் பொதுவான கலாச்சாரப் பொக்கிஷமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக அந்த அமைப்புக்கள், கட்டடங்களில் எவ்வித மாற்றங்களையும் எவரும் இஷ்டப்படி செய்ய அனுமதியில்லை.

இவைகளில் பெரும்பான்மையானவை 14 முதல் 16ம் நூற்றாண்டுகளில் கட்டியெழுப்பப்பட்டவை. புனித யோவானின் படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடக் கலையும், துருக்கிய ஒத்தமான் சாம்ராஜ்ஜியத்தினரால் பாவிக்கப்பட்ட கட்டடக்கலையையும் இக்கோட்டைக்குள் ஒன்றாகக் காணலாம். அதாவது பல வகைகளிலும் மேற்கும் கிழக்கும் இக்கோட்டைக்குள் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்துகிடக்கிறது சுமார் 35 மத்திய காலக் கிறீஸ்தவ தேவாலயங்களும் பல பள்ளிவாசல்களும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன.

1309 இல் தங்களிடமிருந்து புனித யோவானின் படையினரால் பிடுங்கியெடுக்கப்பட்ட ரோடோஸைப் திருப்பியெடுக்க ஒத்தமானியப் படைகள் 1480 இல் முயற்சி செய்து அங்கிருந்த பலமான கோட்டை அரணைத் தகர்க்க முடியாததால் தோற்றுப்போயின. ஆனாலும் அச்சமயத்தில் ஒத்தமானிய சாம்ராஜ்யத்தின் வேகமான வளர்ச்சிக்கு மத்தியதரைக் கடல், ஏஜியன் கடல் மற்றும் அதையொட்டிய பிராந்தியங்களிலும் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த புனித யோவானின் படையினரின் மையமாக இருந்துவந்த ரோடோஸைக் கைப்பற்றும் குறிக்கோளில் இருந்து மட்டும் மாறவில்லை.  

1520 இல் ஆட்சிக்கு வந்த புதிய ஒத்தமானிய அரசனின் நோக்கத்தை அறிந்துகொண்ட புனித யோவானின் படையின் உயர்குரு ரோடோஸின் கோட்டையை மேலும் பலப்படுத்த ஆரம்பித்தார் வரவிருக்கும் அடுத்த தாக்குதலைச் சமாளிக்க. கோட்டை மதிகள் 150 அடிகளுக்கு உயர்த்தப்பட்டு 24 அடிகள் தடிமனாக்கப்பட்டன.

தீவைச் சுற்றி 30 பலமான கோட்டைகளும், பாதுகாப்பு அரண்களும் கட்டப்பட்டு அவைகளுக்கிடையே இலகுவான முறையில் தொடர்புகள் கொள்ளப் புறாக்கள் பழக்கப்பட்டன. அத்துடன் அடையாள வெடிகளுக்கான பீரங்கிகளும் ஆங்காங்கே ஸ்தாபிக்கப்பட்டனதுறைமுகத்தைப் பொறுத்தவரை அவைகளின் அமைப்பு பிறைகள் போன்று உருவாக்கப்பட்டது.

ஒத்தமானிய சுல்தான் சுலைமான் 1522 இல் தனது முக்கிய தளபதி முஸ்தபா பாஷாவுடன் நேரடியாக ரோடோஸ் முற்றுக்கையில் ஈடுபட்டார். 1480 தாக்குதலில் சுல்தான் மெஹ்மத் 70 000 பேர்கள் கொண்ட படையுடன் போரிட்டுத் தோல்வியடைந்ததால் சுலைமான் 100 000 பேர்கள் கொண்ட படையுடனும் நவீன ரகப் பீரங்கிகள் உட்பட புதிய போர் ஆயுதங்களுடனும், வெடிமருந்து தொழில்நுட்பங்களுடனும் வந்து ரோடோஸுக்கு வெளியே தங்கினார்.

டோரோஸின் துறைமுகங்களைச் செயலிழக்கச் செய்ததன்மூலம் கோட்டைக்குள்ளிருப்பவர்களுக்கு எவ்வித வெளி உலகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. புனித யோவானின் படையினரோ சுமார் 7,500 பேர்கள் மட்டுமே.

புனித யோவானின் படையினரின் அடித்தளமாக கடவுள் விசுவாசமும் தேர்ந்த இராணுவத் தொழில்நுட்பமும் விளங்கின. தலைமைக் குருவும் அதன் கீழ் படிநிலையில் அமைக்கப்பட்ட தட்டு வீரர்களாக அப்படை இயங்கியது. அவ்வீரர்கள் கடவுளுக்குச் சேவைசெய்பவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுக் குடும்ப வாழ்வைத் துறந்தவர்களாக இருந்தார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் படையினரிடம் மிக உயர்ந்த கட்டுப்பாடு இருந்தது.

ஆனி மாதத்தில் சுல்தானின் படைகளின் முதல் பகுதி 400 போர்க் கப்பல்களுடன்முஸ்தபா பாஷாவின் தலைமையில் வந்திறங்கியபோதே தயாராக இருந்த புனித யோவானின் படையினர்முதல் அணியில் வந்த போர்க்கப்பல்களை மூழ்க வைத்தார்கள்.

சுலைமானின் படையில் சில ஆயிரம் பேர்கள் முதல் வாரத்திலேயே கொல்லப்பட்டார்கள். கோட்டைக்குள் தயாராக இருந்த புனித யோவானின் படைகளின் தாக்குதல் அத்தனை உக்கிரமாக இருந்தது.

ஒத்தமானியப் பீரங்கிப்படைகள் விடாமல் தங்கள் நவீன பீரங்கிகளால் தாக்கினார்கள். சில இடங்களில் கோட்டை மதில் ஓரளவு உடைந்தது. ஆனாலும் உள்ளே புகுமளவுக்கு எங்கேயுமே வழி கிடைக்கவில்லை. எனவே இரகசியமாகச் சுரங்கப் பாதைகளை உண்டாக்கி உள்ளே புகுவதிலும் சுல்தானின் படையினர் ஆரம்பித்தனர்.

அதை எதிர்பார்த்திருந்த புனித யோவானின் படையினர் ஏற்கனவே இத்தாலியச் சுரங்கப் பொறியியலாளரான கபிரியேல் தடினி என்பவரைத் தங்களிடம் வேலைக்கமர்த்தியிருந்தார்கள். போரில் ஈடுபட முடியாத சிறு பிள்ளைகளை அரணில் ஆங்காங்கே காதுவைத்து அடுத்த பக்கத்தில் சுரங்கம் தோண்டுவதை அறிந்து எதிரிகளை வீழ்த்தும் முறையை தடினி பாவித்தார். அவருடைய பிரத்தியேகத் திறமையினால் எங்கெங்கே சுரங்கத்துக்கான முயற்சிகள் நடக்கின்றன என்பதைப் மதிலின் உட்பாகத்திலிருந்து கணித்து அவைகளை எதிர்கொள்ள முடிந்தது.

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து தாக்கியும் ரோடோஸ் அரணை அசைக்க முடியவில்லை. விளைவாகத் தனது பால்ய நண்பனும், பல போர்களில் வெற்றியெடுத்துத் தந்தவனுமான முஸ்தபா பாஷாவைத் போர்த் தலைமையிலிருந்து விலக்கினார் ஒத்தமானிய அரசன் சுலைமான்.

காலம் கடந்துகொண்டிருந்தது ரோடோஸுக்கும் உலகுக்கும் இருந்த சகல தொடர்புகளையும் சுலைமான் தனது முற்றுக்கையின் மூலம் வெட்டிவிட்டான். வருடக் கடைசி மாதத்தில் புனித  யோவானின் படையினரில் நான்கில் ஐந்து பகுதியினர்தான் மிச்சமிருந்தார்கள். போருக்குத் தேவையான உபகரணங்கள், உள்ளே இருப்பவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்கள் எவையுமே வெளியிலிருந்து கொண்டுவரப்பட இயலவில்லை.

மார்கழி 11- 13 திகதிகளில் போர் நிறுத்தமொன்று ரோடோஸின் வேண்டுகோளுக்கு இணங்க உண்டாக்கப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. ஆனால், புனித யோவானின் படைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாத சுலைமான் மீண்டும் ஆக்ரோஷமாகக் கோட்டையைத் தாக்க ஆரம்பித்தார்.

கோட்டை மதில்கள் தகர்க்கப்பட்டன. புனித யோவானின் படைகளின் சேதம் மேலும் அதிகரித்தது. நகர மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் சுலைமானிடம் சரணடைய ஒத்துக்கொண்டார்கள்.

புனித யோவானின் படையினர் பனிரெண்டு நாட்களுக்குள் ரோடோஸிலிருக்கும் தமது போர்த் தளபாடங்கள், சமயச் சின்னங்களுடன் ரோடோஸைவிட்டு வெளியேறவேண்டும் என்று ஒத்தமானியச் சுல்தான் கண்ணியமாக அனுமதித்தான்.

சுமார் இருநூறு ஆண்டுகளாக ரோடோஸில் கோலோச்சி ஒத்தமானிய சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்குத் தலையிடியாக இருந்துவந்த புனித யோவானின் படையினர் இதன்மூலம் பெரும் வீழ்ச்சியை அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *