ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில் கட்டுப்பாடுகள், அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் மறுப்பு போன்ற பல நடவடிக்கைகளை அந்த நாடு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அந்த வழியில் மேலுமொரு கட்டுப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஆங்காங்கே “அகதிகள் பாதுகாப்பு – விண்ணப்ப மையங்கள்” அமைப்பதாகும். டென்மார்க்குக்கு அகதியாக வர விரும்புகிறவர்கள் தமது நாட்டின் அருகிலுள்ள டனிஷ் அகதிகள் முகாமில் சென்று தமது விண்ணப்பத்தைக் கொடுக்கலாம் என்கிறது டென்மார்க்.
“பல இக்கட்டுக்களைக் கடந்து தமது உயிரைப் பணயம் வைத்து டென்மார்க்கைத் தேடி வருகிறவர்களிடமிருந்து மனிதக் கடத்தல்காரர்கள் உழைக்கிறார்கள். அதனால், அவர்கள் மேலும் பல அகதிகளைக் கடத்துவதற்கு முயல்கிறார்கள். அகதிகளாக வருகிறவர்கள் பலர் வழியிலேயே இறக்கிறார்கள். இந்த நிலையைத் தடை செய்வதும் எமது நோக்கமாகும்,” என்கிறார் டென்மார்க்கின் அகதிகள் விவகார அமைச்சர். அத்துடன் டென்மார்க் தனது நாட்டுக்குள் வரும் வேறு கலாச்சாரம், மதம் உடையவர்களால் நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் கருதுகிறது.
சமீபத்தில் சில நாடுகளுடன் தாம் அகதிகள் பாதுகாப்பு – விண்ணப்ப மையங்கள் அமைப்பது பற்றிப் பேசிவருவதாகவும் அவைகளில் சிலவற்றில் வெற்றி கிடைக்குமென்று நம்புவதாகவும் டென்மார்க் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ருவாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அவைகளில் இரண்டாக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது. தாம் பேச்சுவார்த்தைகள் நடத்திவரும் நாடுகளின் பெயர்களை டென்மார்க் இன்னும் உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்தவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்