பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. அதே போலவே அந்தக் கெடுவுக்குள் நாட்டோவின் படைகளும் அங்கிருந்து வெளியேறிவிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

https://vetrinadai.com/news/afgan-nato-usa/

படிப்படியாக வெளியேறவிருக்கும் வெளி நாட்டுப் படைகள் மீது தாம் தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கத்தினர் உறுதியளித்திருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுடைய கவனம் ஆப்கானிய அரசின் இராணுவத்தின் மீது  திரும்பியிருக்கிறது. அத்துடன் தாம் கொடுத்த உறுதிக்கெதிராக சாதாரண மக்களின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மே மாத முதல் நாட்களில் தலிபான்கள் கஸ்னி பிராந்தியத்திலிருக்கும் ஆப்கானிய இராணுவ முகாமொன்றைக் குறிவைத்துத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதன் மூலம் அந்த நகரைத் தங்கள் கைவசப்படுத்திக்கொண்டார்கள். இராணுவத்தினர் சிலர் கைப்பற்றப்பட்டு மேலும் சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

அதே சமயத்தில், இன்னொரு தாக்குதலில் லொகார் மாகாணத்தில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதியொன்றையும் குண்டுவைத்துத் தகர்த்திருக்கிறார்கள். அந்த விடுதியில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தற்காலிகமாக வந்து தங்கியிருந்தார்கள். அத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு மேலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

 இன்று சனியன்று காபுல் சிறுமிகள் பாடசாலையொன்றையடுத்து மூன்று வாகனங்கள் ஒவ்வொன்றாக வெடித்தது. பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவிகள் பலர் அத்தாக்குதலில் இறந்ததாகத் தெரிகிறது. இறந்தவர்களின் தொகை சுமார் 40 என்றும் மேலும் 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிச்சயமாக இறந்தவர்கள் தொகையை எவரும் ஊர்ஜிதம் செய்யாவிடினும் அத்தொகை அதிகரிக்கும் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.

 விடுதி மாணவர்கள், பாடசாலை மாணவிகள் மீது குண்டு வைத்தது பற்றி எவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சந்தேகம் தலிபான்கள் மீதே விழுகிறது. இவைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதாக ஆப்கான் அரசு உறுதியளித்திருக்கிறது. 

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உறுதிமொழிப்படி மே மாதத்திலேயே ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு இராணுவம் வெளியேறியிருக்கவேண்டும். அதை ஞாபகப்படுத்தவே இந்த மாத முதல் நாளிலிருந்து தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *