இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா பிராந்தியம், அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதிகளிலும் வன்முறை தொத்திக்கொண்டது. அதனுடன் ஜெருசலேம் தினத்தை இஸ்ரேலியர்கள் கொண்டாடுவதால் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் பற்றிய காட்டமும் சேர்ந்துகொள்ள பாலஸ்தீனர்கள் – இஸ்ராயேல் பொலீசார், இராணுவம் ஆகியோருக்கிடையே போர் கிளர்ந்தெழுந்திருக்கிறது. 

https://vetrinadai.com/news/jerusalem-palas-day/

இவைகளில் மையமாக இருப்பது தேவாலயப் பிராந்தியம் எனப்படும் ஆபிரகாமிய சமயங்களின் புனித தலங்களையெல்லாம் கொண்ட பகுதியாகும். அங்கிருக்கும் அல் அக்ஸா பள்ளிவாசலில் ரமழான் மாதத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடுவதுண்டு. அவர்கள் அதற்கருகேயிருக்கும் யூதர்களின் முறையீட்டு மதிலுக்கு வருகிறவர்களைப் பிரிக்க, கண்காணிக்கும் பொலீசாருடன் கைகலப்புகளில் ஈடுபட்டார்கள். பொலீசார் மீது அவர்கள் கல்லெறிய பொலீசார் திருப்பித் தாக்க அப்பிரதேசம் போர்க்களமாகியதாகப் பல சாட்சிகளும் தெரிவிக்கின்றன.

அல் அக்ஸா பிராந்தியத்திலிருக்கும் பொலீசார் உடனடியாக அங்கிருந்து விலகாவிட்டால் தாம் இஸ்ராயேலைத் தாக்கப்போவதாக ஞாயிறன்று ஹமாஸ் இயக்கத்தினர் காஸாவிலிருந்து எச்சரிக்கை விடுத்தார்கள். தொடர்ந்தும் அங்கு மட்டுமன்றி கிழக்கு ஜெருசலேமிலும் வன்முறைகள் குறையவில்லை.

காஸாவிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ராயேல் மீது ஏவுகணைகளைச் செலுத்த ஆரம்பித்தது. பதிலடியாக இஸ்ராயேல் காஸா மீது தனது விமானப்படையால் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தது. சில வருடங்களாகத் தாக்குதலுக்குள்ளாகாமலிருந்த காஸாவில் பலர் காயப்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாகச் செவ்வாயன்று தெரியவந்தது. 

காஸா பகுதிகளிலிருந்து ஹமாஸ் இஸ்ராயேலைத் தாக்கும் சமயங்களில் எகிப்து மூலமாக பேச்சுவார்த்தைகள் நடப்பது வழக்கம். இம்முறை அல் அக்ஸா பிராந்தியம் அதையடுத்த யூதர்களின் புனித தலங்களெல்லாம் வன்முறை பரவ ஆரம்பித்திருப்பதால் இஸ்ராயேல் விடாமல் பாலஸ்தீனப் பகுதிகளில் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கான கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

செவ்வாயன்று பிற்பகலில் காஸாவின் தாக்குதலினால் இஸ்ராயேலின் இரண்டு பெண்கள் இறந்துவிட்டதாகச் செய்தி வரவே பிரதமர் நத்தான்யாஹு ஹமாஸின் மீது நாட்டின் விமானப்படை தாக்குதல்களை அதிகப்படுத்தும் என்று தெளிவாகக் கூறிவிட்டார். ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதலில் இறந்த இரு பெண்களில் ஒருவர் கேர​ளாவைச் சேர்ந்த 32 வயது சௌம்யா சந்தோஷ் ஆகும். குறிப்பிட்டது போலவே தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

செவ்வாய் இரவன்று காஸாவில் பத்து மாடிக் கட்டிடமொன்றை இஸ்ராயேலின் போர் விமானங்கள் குண்டு போட்டுத் தாக்கின. அக்கட்டிடத்தில் ஒரு ஹமாஸ் காரியாலயம் இருப்பதாகக் குறிப்பிட்டு அதைத் தாக்கப்போவதாக இஸ்ராயேல் முதலிலேயே அறிவித்தது. அக்கட்டடம், மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருப்பவர்கள் வெளியேறவேண்டுமென்று இஸ்ராயேல் அறிவித்தபின் அத்தாக்குதல்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது.

தாக்கப்பட்ட கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால், அப்பகுதி முழுவதும் இடிபாடுகளாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஞாயிறன்று முதலே சர்வதேசத் தலைவர்கள் இஸ்ராயேலை கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கேட்டு வருகிறார்கள். நடந்துகொண்டிருக்கும் இது ஒரு பெரும் போராக மாறும் ஆபத்து இருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலை மேலும் மோசமாக முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிறுத்துவதற்காக ஐ.நா- வின் பாதுகாப்புச் சபை கூடிப் பேசவிருக்கிறது.

சமீபத்தில் நடந்த தேர்தல்களின் பின்பு இஸ்ராயேலில் இன்னும் ஒரு அரசு அமையவில்லை. பதவியிலிருக்கும் நத்தான்யாஹூவின் எதிர்க்கட்சிகளிடம் அரசமைக்க முயற்சிக்குமாறு நாட்டின் ஜனாதிபதி கேட்டிருக்கிறார். எனவே உள்நாட்டு அரசியல் நிலைமையிலும் நத்தான்யாஹு நெருக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தனது அரசு பாலஸ்தீனர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வல்லமையுள்ளது என்பதை நிரூபிக்க அவர் தன்னாலான வன்முறையைப் பிரயோகிக்கத் தவறப்போவதில்லை என்பது போரை மேலும் வலுவாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *