ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று நடந்த வாக்கெடுப்பில் அவரை விலக்குவதென்று முடிவாயிற்று.
இதன் பின்னணியிலிருக்கும் முக்கிய காரணம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகும். நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்கவில்லையென்று குறிப்பிட்ட அவரது கருத்தை எதிர்த்தவர்களை ஒவ்வொன்றாக ஒதுக்கிக் கட்டுவதில் டிரம்ப் முனைந்திருக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் தனியாக ஒரு ஆதரவு நிதிக் கணக்கை ஆரம்பித்துப் பெருமளவு பணத்தை வைத்திருக்கும் அவர் வரும் தேர்தல்களில் தனக்கு ஆதரவானவர்கள் பதவிகளைக் கைப்பற்ற உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.
அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து கைப்பற்றும்படி ரிபப்ளிகன் கட்சிக்காரர்களை உசுப்பிவிட்டதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவரை அரசியல் சட்ட நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தும்படி டெமொகிரடிக் கட்சியினர் கோரினர். அதற்கான வாக்கெடுப்பில் டெமொகிரடிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்த ஒன்பது ரிபப்ளிகன் கட்சிப் பிரதிநிதிகளில் ஒருவர் லிஸ் சேனியாகும். அத்துடன் அவர் பல தடவைகள் பகிரங்கமாக ஜனாதிபதித் தேர்தல் ஒழுங்காக நடந்ததாகவும், வாக்கு எண்ணுதலில் புரளிகளேதுமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் பதவி விலகிய பின்னர் லிஸ் சேனி தொடர்ந்தும் டிரம்ப்பின் நடத்தைகள் பலவற்றைக் கடுமையாக விமர்சித்து வருபவர். டிரம்ப் தேர்தலின் பின்னர் நடந்த விதம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைப்பதாக இருப்பதாகவும் சாடி வருகிறார். எனவே லிஸ் சேனி ரிபப்ளிகன் கட்சியின் நம்பிக்கைக்குரியவரல்ல என்று கட்சிக்காரர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
லிஸ் சேனி விலக்கப்பட்டது ரிபப்ளிகன் கட்சிக்குள் டிரம்ப்பின் வழிக்குக் காட்டப்படும் பச்சைக் கொடியே என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் தனது ஆதரவாளர்களை முன் நிறுத்தி அவர்களை வெல்லவைப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் தன்னை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யவேண்டும் என்பது டிரம்பின் திட்டமாகும்.
பதவியிலிருந்து விலக்கப்பட்ட லிஸ் சேனி தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக இருப்பார். வாக்கெடுப்பின் பின்னர் பேசிய அவர், டிரம்ப் மீண்டும் அரசியலில் தலைதூக்கி ரிபப்ளிகன் கட்சியைக் கீழ்ப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராவதைத் தடுக்கத் தன்னாலான எதையும் செய்வதாக உறுதியளித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்