பெலாரூஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறங்கவும், ஒன்றியத்தின் வானத்தில் பறக்கவும் தடை.
ராயன் ஏர் விமானத்தை வானத்தில் மறித்து மின்ஸ்க் விமான நிலையத்தில் இறக்கி அதிலிருந்து பெலாருஸ் பத்திரிகையாளரையும் அவரது பெண் நண்பியையும் கைதுசெய்த பெலாருஸுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று இரவு முடிவுசெய்திருக்கிறது. அதன்படி பெலாரூஸின் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதாகப் பறக்கவும், ஒன்றியத்தின் விமான நிலையங்களில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பெலாரூஸின் நடவடிக்கையானது ஐரோப்பாவின் சுயஆளுமை, ஜனநாயகம், கருத்துரிமைச் சுதந்திரம் ஆகியவைக்கு ஒரு சவாலென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லெயொன் குறிப்பிட்டார். கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் விடுவிக்கப்படவேண்டும், சர்வதேச வான்வெளிப் பேணல் அமைப்பு நடந்ததை விசாரிக்கவேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் அரசும் திங்களன்றே தனது விமான நிறுவனங்கள் பெலாரூஸ் மீது பறக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன் பெலாரூஸின் நிறுவனமான பெலாவியாவின் விமானங்கள் பிரிட்டனின் விமான நிலையங்களில் இறங்குவதையும் தடை செய்திருக்கிறது.
திங்களன்று இர்வு பெலாரூஸ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ரொமான் புரொட்டோசேவிச் தனது குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடும் வாக்குமூலமொன்றைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதன்படி புரொட்டோசேவிச் தான் பெலாரூஸ் அதிபருக்கெதிரான கலவரங்களை நாட்டில் தூண்டிவிட்டதாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அது புரொட்டோசேவிச்சைக் கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வாக்குமூலமே என்று அவரது பெற்றோரும், பெலாரூஸின் எதிர்க்கட்சித் தலைவர்களும் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்