நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பு ஷெல் நிறுவனம் தனது நச்சுக்காற்று வெளியிடுதலைக் குறைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
Friends of the Earth, Greenpeace உட்பட சுற்றுப்புற சூழல் பேணும் ஏழு அமைப்புக்கள் சுமார் 17,000 டச் குடிமக்களின் சார்பில் நெதர்லாந்து நீதிமன்றத்தில் ஷெல் நிறுவனம் தனது செயல்களால் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சுக்காற்றைக் குறைக்கவேண்டுமென்று வழக்குப் போட்டார்கள். தமது தயாரிப்புக்களால் வெளியாகும் நச்சுக்காற்றை 20 % ஆல் 2030 வரை குறைக்கத் திட்டமிட்டிருந்தது. சூழல் அமைப்புக்களின் கோரிக்கையோ பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்துக்கு ஒவ்வும் வகையில் ஷெல் நிறுவனம் தனது நச்சுக்காற்று வெளியிடலைக் குறைக்கவேண்டும் என்பதாக இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷெல் நிறுவனம் தனது தயாரிப்புக்களினால் ஏற்படும் நச்சுக்காற்று வெளியேற்றலை 45 % ஆல் குறைக்கவேண்டுமென்று தீர்ப்பளித்திருக்கிறது. அதாவது 2019 ம் ஆண்டு வெளியேற்றிய கரியமிலவாயு வெளியேற்றத்துடன் ஒப்பிடும்போது 2030 இல் அவர்கள் 45 விகிதத்தால் அதைக் குறைக்க வேண்டும்.
ஷெல் நிறுவனம் 2030 இல் 20 % க்கும் 2035 இல் 45 %க்கும் குறைத்து 2050 இல் முற்றாக கரியமிலவாயு வெளியிடாத நிறுவனமாக மாறப்போவதாகத் திட்டமிட்டு முதலீடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிடுகிறது. நிறுவனத்தின் பங்குதாரர்களின் கூட்டத்தில் கடந்த வாரம் அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டது.
சரித்திரத்தில் ஒரு நிறுவனத்தின் மீது கரியமிலவாயு வெளியீட்டைக் குறைக்கவேண்டுமென்ற தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். தீர்ப்பு தமக்கு மிகவும் ஏமாற்றத்தைத் தந்திருப்பதாகக் கூறியிருக்கும் ஷெல் நிறுவனம் அதை மேன்முறையீடு செய்யப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்