பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?
ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ விமானத் தளம் சமீபத்தில் முழு வேலையும் முடிந்து பாவனைக்குத் தயாராக இருக்கிறது. அதைக் கட்டியவர் யார், எவருக்கு அது சொந்தமானது என்ற விடயமோ மர்மமாகவே இருக்கிறது.
மாயுன் தீவிலிருக்கும் சுமார் ஆறு கி.மீ நீளமான விமானமிறங்கும் இடம் அங்கிருந்து கிழக்கு ஆபிரிக்கா, யேமன், ஏடன் குடா, செங்கடல் ஆகிய பிராந்தியங்களைத் தாக்குவதற்கு வசதியானது. தீவானது யேமனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் யேமனின் உத்தியோகபூர்வமான அரசு நாடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையிலில்லை. அந்த அரசுடன் தொடர்பு கொண்டதி அந்த விமானத்தளம் எமிரேட்ஸுகுச் சொந்தமானது என்று பதில் கிடைத்தாலும் எமிரேட்ஸ் தனது பங்குக்கு எதையும் சொல்ல மறுத்து வருகிறது.
யேமனின் உள்நாட்டுப் போரில் 2019 க்கு முன்னரிருந்த நிலைமையில் சவூதி அரேபியா, ஈரான், ஹூத்தி போராளிகள் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், 2019 இல் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கையின்படி எமிரேட்ஸ் அங்கிருந்து வெளியேறியதாகவே குறிப்பிடப்பட்டது. 2015 இல் அங்கிருந்த ஹூத்தி போராளிகளை எமிராத்திய இராணுவம் துரத்தியது. அதன் பின்பு யேமனிய அரசிடம் அந்தத் தீவைத் தமக்கு 20 வருடத்துக்குத் தரவேண்டுமென்று எமிராத்தியர்கள் நிர்ப்பந்தித்து ஒப்பந்தம் எழுதிக்கொண்டதாக யேமனிய அரசு தெரிவிக்கிறது.
2015 இல் எமிராத்திய நிறுவனங்கள் அந்தத் தீவுக்குப் பல கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்றதாகவும் கட்டட வேலைகள ஆரம்பித்ததாகவும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் காணமுடிகிறது. 2016 இல் அக்கட்டட வேலைகள் கைவிடப்பட்டதையும் அப்படங்களில் காணமுடிகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களை ஊடகங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்களிடம் அந்தத் தீவுக்குப் பொருட்கள் கொண்டுபோனதற்கான எவ்வித கோப்புகளும் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.
அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு பதவியேற்றபின் யேமன் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்தே அந்த இராணுவத் தளம் மீண்டும் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எவரது முடிவுப்படி அத்தளம் கட்டப்பட்டது, அது தற்போது எவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசு வெளிப்படுத்த மறுக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்