பேருக்கு இரண்டு போட்டியாளர்களை வைத்து நடந்த சிரியத் தேர்தலில் பஷார் அல் ஆஸாத் 95 % வாக்குகள் பெற்று வெற்றி!
1971 லிருந்து ஆட்சியைத் தன் கைகளுக்குள் வைத்திருந்த தனது தந்தை ஹபீஸ் அல் ஆஸாத்துக்குப் பின்னர் 2000 இல் பதவிக்கு வந்தவர் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆஸாத். இரண்டாவது தடவையாக அவர் நடத்திய இந்த ஜனாதிபதித் தேர்தலும் வெறும் கண் துடைப்புத்தான் என்று சர்வதேச அளவில் விமர்சனம் செய்யப்பட்டது. அத்தேர்தல் முடிவாக பஷார் 95 % விகிதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நீண்ட காலமாக நாட்டுக்குள் பல பிரிவினரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு போரிட்டு வரும் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஈரானும் செயற்பட்டு வருகின்றன. சர்வதேச ரீதியில் அமெரிக்க, ஐரோப்பிய எதிர்ப்புக்களைச் சமாளிப்பதில் ரஷ்யா பஷார் அல் ஆஸாத்துக்குக் கைகொடுத்து வருகிறது.
11 மில்லியன் சிரியர்கள் நாட்டைவிட்டுப் போரினால் புலன்பெயர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. புதனன்று வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கைப் பதிந்த பஷார் அல் ஆஸாத் வெளிப்படையாகவே “நடக்கும் தேர்தலை விமர்சிப்பவர்களைத் தான் அலட்சியப்படுத்துவதாகக்” குறிப்பிட்டார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கையோங்கியிருக்கும் இட்லிப் மாகாணத்திலும், வடமேற்குச் சிரியாவில் குர்தீஷ் மக்கள் பெரும்பாலான அளவில் வாழும் பகுதிகளிலும் தேர்தல் நடாத்தப்படவில்லை. வெளிநாடுகளில் வாழும் சிரியர்களில் தங்களைத் தூதுவராலயங்களில் பதிந்துகொண்டவர்களில் ஒரு சாரார் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்