சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் சரித்திரத்தில் முதல் தடவையாக மக்களின் பங்கெடுப்பு, வாக்கெடுப்புக்களுடன் மாற்றியெழுதப்படவிருக்கிறது. 

சர்வாதிகாரி பினொச்சேயின் அரசியலமைப்புச் சட்டத்திலிருக்கும் பல பழமைவாத, வலதுசாரிக் கோட்பாடுகளை நீண்டகாலமாக எதிர்த்து வந்த சிலிய மக்கள் 2019 இல் ஆண்டு முழுவதும் பல பேரணிகளும், ஊர்வலங்களும் நடாத்தினார்கள். அவர்களுடைய கோரிக்கை அந்த அரசியலமைப்புச் சட்டம் மக்களின் பங்கெடுப்புடன் வரையப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்பதாகும். மக்களின் போர்க்குரலை அலட்சியப்படுத்த முடியாத நிலையில் அதுபற்றிய மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக ஒக்டோபர் 2020 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 78 % விகித வாக்குகளால் புதிய அரசியலமைப்புச் சட்டமெழுதுவதற்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் தேர்தலை நடாத்துவதென்று முடிவாயிற்று. 

அரசியலமைப்புச் சட்டத்தை வரையும் பிரதிநிதிகளாகுவதற்காக 1,468 பேர் போட்டியிடுகிறார்கள். ஆண் பெண் சம உரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, முதலாளித்துவக் கோட்பாடுகளைத் தொடருதல், நாட்டின் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடாதென்று விரும்புகிறவர்கள் வரை பிரதிநிதிகளாவதற்காகப் போட்டியிடுகிறார்கள். நாட்டின் ஜனநாயக உரிமைகளைச் சகலரும் அனுபவிக்க வழிசெய்யவேண்டுமென்ற ஆர்வம் பெரும்பாலான வேட்பாளர்களிடம் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே சிலி எதிர்காலத்தில் சமூகத்தின் பல குழுக்களையும் பங்கெடுக்கச் செய்யும் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.

இத்தேர்தலில் தெரிந்தெடுக்கப்படுகிற 155 பிரதிநிதிகளால் வரையப்படும் அரசியலமைப்புச் சட்டமானது 2022 நடுப்பகுதியில் மக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். அந்த வாக்கெடுப்பில் அந்த அரசியலமைப்புச் சட்டம் மக்களால் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில் ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்புச் சட்டமே தொடர்ந்தும் அமுலிலிருக்கும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *