அதிபர் மக்ரோனை நெருங்கி முகத்தில் அறைந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் அதிபர் மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தாக்கப்பட்ட காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அதிபரைத்தாக்கியவரும் கூட்டத்தில் காணப்பட்ட மற்றொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. பிரான்ஸில் உணவகங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அதனை ஒட்டி உணவகங்களது உரிமையாளர்களைச் சந்திப்பதற்காக அரசுத் தலைவர் இன்றுநாட்டின் தென் கிழக்கு நகரமாகிய Drôme பகுதிக்கு விஜயம் செய்தார்.

நண்பகல் ஒரு மணியளவில் அங்கு பாடசாலை ஒன்றுக்கும் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கிளம்புவதற்காகத் தனது காரை நோக்கிச் சென்ற வேளை அவரைக் காண்பதற்காக பலர் வீதியில் காத்து நின்றனர். தனக்காகக் காத்து நின்ற அந்த மக்களுடன் உரையாடச் சென்ற சமயமே கூட்டத்தில் காணப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென அவரை நெருங்கிக் கன்னத்தில் அறைந்ததார். எதிர்பாராத விதமான அந்தத் தாக்குதலில் இருந்து மக்ரோன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டபோது அருகே நின்றிருந்த மெய்க்காவலர்கள் விரைந்து அவரைப் பாதுகாப்பாக அப்பால் அழைத்துச் சென்றனர்.

இளைஞன் மக்ரோனின் முகத்தில் அறைகின்ற காட்சி வீடியோ படமாக்கப்பட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர் “Montjoie Saint-Denis ! À bas la macronie !” என்று உரக்கச் சத்தமிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.அவர் ஒரு தீவிர வலதுசாரியாக இருக்கக் கூடும் என்றுநம்பப்படுகிறது. அவர் எழுப்பிய அந்தசுலோகத்தின் அர்த்தம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

நாட்டின் தலைவர் உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட இன்றைய சம்பவம் அரசியல்மட்டத்தில் பலத்த கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. பல அரசியல் பிரமுகர்களும்உடனடியாகவே தங்கள் கண்டனக்கருத்துக்களைப் பதிவு செய்துவருகின்றனர். “நாட்டின் தலைவர் ஊடாக ஜனநாயகம் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ கண்டித்திருக்கிறார்.

முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்கோஷிமீது 2011 இல் இது போன்ற ஓர் உடல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது. Lot-et-Garonne என்னும் இடத்தில் வைத்து நபர் ஒருவர் சார்கோஷியின் சட்டைக் கொலரில் பிடித்து தள்ளித் தாக்கமுற்பட்டிருந்தார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *