வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர், விபரங்களற்ற ஆயிரத்துக்கும் மேலான பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பலரின் மனதை வாட்டிவருகின்றன. அதனால் பல இடங்களில் கண்டன ஊர்வலங்களும் நடந்தன. அவர்கள் சிலர் விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகளையும் தள்ளி விழுத்தியிருக்கிறார்கள்.

https://vetrinadai.com/news/canada-cathol-residential-schools/

எலிசபெத் மகாராணியின் ஆட்சிக்காலத்தில் கனடாவின் பழங்குடியினரின் பிள்ளைகள் அரசாங்கத்தால் நடாத்தப்படும் கத்தோலிக்க தேவாலயத்தின் பாடசாலைகளில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தமது மொழியைப் பேசுவதைத் தடுப்பதற்காகவும், கலாச்சாரத்தைப் பேணுவதைத் தடுப்பதற்காகவும் அந்த அரச பாடசாலைகளின் தங்குமிடங்களிலே வாழ்ந்து கனடாவின் பெரும்பான்மையினரின் வாழ்க்கை முறைகளை வாழப் பழகவேண்டுமென்பதே அதன் நோக்கமென்று குறிப்பிடப்பட்டது.

கத்தோலிக்க குருமார், துறவிகளால் நடாத்தப்பட்ட அந்தப் பாடசாலைகளில் குழந்தைகள் கடுமையான கட்டுப்பாடுகள், தண்டனைகள், குரூரமான கையாளல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 150,000 பிள்ளைகள் அதனால் பாதிக்கப்பட்டனர். அப்பாடசாலைகளில் பல குழந்தைகள் கற்பழிப்புக்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டனர்.

கண்டன ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் பழங்குடியினர் அழிப்பை நாஸிகளின் யூத அழிப்புக்கு இணையாக ஒப்பிட்டனர். “நாஸிகள் தமது மிலேச்சத்தனத்துக்காகத் தண்டிக்கப்பட்டார்கள், பழங்குடியினரை அழித்தவர்களுக்குத் தண்டனைகள் கொடுக்கப்படவில்லை,” என்று பழங்குடியினரின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கிறார்கள். அந்த ஊர்வலங்களில் பங்குகொண்டவர்களே மகாராணிகளின் சிலைகளுக்கு கறுப்பு உட்பட்ட வெவ்வேறு நிறங்களைப் பூசிவிட்டுப் பின்பு அவைகளைத் தகர்த்து விழுத்தியிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *