பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பணிபுரிவதால் அவர்கள் ஓகஸ்ட் மாதத்துக்குமுன்னர் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். சுகாதாரப் பாஸ் என்பது இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியமைக்கான தடுப்பூசிச் சான்றிதழ் (டிஜிட்டல் அல்லதுகாகித வடிவங்கள்), 48 மணிநேரத்தினுள்செய்யப்பட்ட வைரஸ் தொற்றுப் பரிசோதனைச் சான்றிதழ் அல்லது வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததை உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று ஆகும். (une preuve de vaccination, un test négatif de moins de 48 heures ou un test positif attestant du rétablissement du Covid-19 pour y accéder).

உணவகங்கள், அருந்தகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லுகின்ற வாடிக்கையாளர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருப்பது கட்டாயம். உணவகங் களில் பணிபுரிபவர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.

அதிபர் மக்ரோன் தனது நேற்றைய உரையில் இதனை அறிவித்திருந்தார். உணவக ஊழியர்கள் தினமும் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு பணிக்குச் செல்ல முடியாது. எனவே தடுப்பூசிஏற்றவேண்டிய அவசரமும் அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையைப் பொறுத்த வரை பாரிஸ் நிலத்தடி மெற்றோ மற்றும் மற்றும் புறநகரங்களை இணைக்கின்ற ரயில் சேவைகள் (Les métros et les trains de banlieue) தவிர்ந்த ஏனைய நீண்ட தூர ரயில், பஸ், விமான பயணங்களுக்கும்சுகாதாரப் பாஸ் அவசியமாகின்றது. எனவே இத்துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

உணவகங்கள், அருந்தகங்கள், வணிக வளாகங்கள், ரயில்கள், பஸ்கள், விமானம், மருத்துவமனை, ஓய்வூதியர் தங்ககங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள் (bars, restaurants, cafés et centres commerciaux, aux trains, aux bus longue distance, aux avions, aux hôpitaux, aux maisons de retraite et aux établissements médicaux) போன்றவற்றில் சுகாதாரப் பாஸைக் கட்டாயமாக்குகின்ற அதிபரது முடிவு நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்ட பிறகு சட்டமாக்கப்படும். அதன் பின்னர் ஓகஸ்ட் மாதத்தில் அமுல்ப்படுத்தப்படும்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *