“இத்தனை வேகமாக நாட்டை நாம் பொறுப்பெடுக்கவேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார்கள் தலிபான்கள்.
மூன்று மாதங்களாவது ஆப்கானிய இராணுவம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றாமல் எதிர்த்துப் போரிடும், என்ற அமெரிக்க உளவுத்துறைக் கணிப்பு வந்த ஒரே வாரத்தில் காபுல் நகரத்தினுள் தலிபான் இயக்கத்தினர் புகுந்து நாட்டைக் கைப்பற்றினார்கள். பிழை எங்கேயிருக்கிறது, அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தமது படைகளை வாபஸ் வாங்கியது தவறா, போன்ற சர்ச்சைகள் உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.
தலிபான் இயக்கத்தினரின் ஊடகத் தொடர்பாளர் ஒருவர் அல் ஜஸீரா ஊடகத்துக்குக் கொடுத்திருக்கும் பேட்டியிலிருந்து அவர்களே கூட அத்தனை இலகுவாக, வேகமாக ஆப்கானிஸ்தானின் ஆட்சியைப் பொறுப்பெடுக்கவேண்டிவருமென்று எதிர்பார்க்கவில்லை என்று உண்மை வெளியாகியிருக்கிறது.
“ஆப்கானிஸ்தானின் அரச படைகள் தமது பாதுகாப்புக் காவல் நிலையங்களைக் கைவிட்டுவிட்டார்கள். அதனால், நாம் எமது இயக்கத்தினர் காபுலுக்குள் நுழைந்து அந்த நிலையங்களைப் பொறுப்பெடுக்கும்படி உத்தரவு கொடுக்கவேண்டியதாயிற்று,” என்று குறிப்பிடுகிறார் பேட்டியில் அப்துல் கஹார் பல்கி.
“நாம் காபுலைக் கைப்பற்றும் நோக்கத்தில் இருக்கவே இல்லை. எங்கள் எதிர்பார்ப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து ஒன்றிணைந்த ஒரு ஆட்சியை ஸ்தாபிப்பதாக இருந்தது. காபுலைச் சுற்றிவளைத்து அதற்காகப் பேச்சுவார்த்தை நடாத்த நாம் திட்டமிட்டிருந்தோம்,” என்று பல்கி குறிப்பிடுகிறார்.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கொடுத்த முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குபற்றியவர் பல்கி. தொடர்ந்தும் தமது இயக்கம் “எவரையும் பழிவாங்க விரும்பவில்லை, பெண்களின் உரிமைகளை மதிக்கும், ஒன்றிணைந்த ஒரு அரசாங்கத்தை உண்டாக்கும்,” என்றே குறிப்பிடுகிறார் பல்கி.
ஆப்கானிஸ்தானில் பல நகரங்களில் நடந்துவரும் பழிவாங்கள்கள், அராஜகங்கள் பற்றிக் கேட்டபோது, “எமது இயக்கம் கட்டுக்கோப்பாக இருப்பதையே நாம் விரும்புகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எங்களால் விசாரித்துத் தண்டிக்கப்படுவார்கள்,” என்று பல்கி பதிலளித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்