மாற்றம் செய்! வீறுசெய்!

– பாவரசு குறள்…

சுழன்றெழு! தீயென்றே சூழ்ந்திடு! தீய
வழக்கொடிக்கும் வீரனாய் வாழு!

பழகிடு ரௌத்திரம்! பாரதி சொன்னான்!
அழன்று காப்பாய் அறம்!

வீரம்செய்! மாற்றம் செய்! வீறுசெய்! கோபம்செய்! தீரம்செய்! நீங்கும்பார் தீது!

வீரமுடன் வாழாதோர் வீழ்ந்திடுவார் என்பதனால் தீரராக நீயே திருத்து!

மாற்றார் வலியை மனதினில் கொண்டால் ஊற்றென வாழ்வாய் உவந்து!

காற்றாக மாறு! கடல்போன்று பொங்கிடு!
சீற்றத்தை ஏற்றியே சீறு!

துணிந்தே எழுவாய்! துயரம் களைவாய்!
இனியும் பொறுத்தல் இழுக்கு!

முயற்சியால் மேலெழும்பு! மூண்டெழும் தீபோல் உயர்ந்தெழு! வென்றே முழங்கு!

பசித்த வயிற்றோடு பஞ்சத்தில் வாழ்வோர்
புசித்திடவே ஈதல் புகழ்!

மனிதர்கள் ஒன்றிணைந்து மண்மீது வாழ்தல் இனிமைக்கு வித்தாகும் இன்!

உனக்குள் இருக்கும் உறுதி தனையே கனலாய் எழுப்பு கனன்று!

முடிகொண்டு வாழ்ந்தோர் முடிவுதனை கண்டால்
பிடிசாம்பல் தானே பிழம்பு!

எழுதுவது : பாரதிசுகுமாரன்