ஒமெக்ரோன் தென்னாபிரிக்காவில் நோயாளிகளை மட்டுமன்றி தடுப்பூசி போடுகிறவர்களையும் அதிகரிக்க வைக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு மேலாகிறது தென்னாபிரிக்காவிலும் அதைச் சுற்றிய நாடுகளிலும் கொவிட் 19 திரிபான ஒமெக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டு. விளைவாக தென்னாபிரிக்காவின் நாலாவது அலை கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைச் சுனாமி அலைபோன்று உயர்த்திவருகிறது.

இதற்கு முன்னர் உலகில் பரவிய டெல்டா திரிபு போலன்றி ஒமெக்ரோன் திரிபினால் இறப்பவர்கள் அதிகமில்லை. கோடைகாலக் காட்டுத்தீ போன்று ஒமெக்ரோன் திரிபு பலரிடம் வேகமாகப் பரவினாலும் கூட அதனால் ஏற்படும் நோயின் தாக்கம் குறைவு என்றே வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை பல இளவயதினரும் கூட ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு நாளில் மட்டுமே சுமார் 13,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆனாலும், ஒரு நல்ல விளைவாக ஒமெக்ரோன் தொற்றுக்குப் பயந்து தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள முன்வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக மக்கள் ஆரோக்கிய சேவையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்