வீழ்வேனென்று நினைத்தாயோ?

ஒற்றைச் செங்கலென ஒதுக்கி நீவைத்தாலும்அற்ப பதரென அரிந்து நீவிட்டாலும்விழுந்தால் மழையாய் விழுவேன் மண்ணில் எழுந்தால் மலையாய் எழுவேன் முன்னில்…

வீழ்வே னென்று வீண்கனவு காணாதே வாழ்வதற்கு நானில்லை வீழ்த்த நீயுமெண்ணாதே.தாழ்த்திடவே நீசெய்யும் தரக்குறைவு சொற்களெல்லாம்வீழ்த்திடாது என்னையும் வீணனே நீபுரிந்துகொள்

பெண்ணுக்கு மயங்குகின்ற பேதையெனச் சொல்லாதேபென்னுக்கு(எழுதுகோல்) மயங்குகின்ற பித்தனெனத் தெரிந்துகொள்.இத்தனை வருடமாக இருக்கின்றேன் தனிமரமாய்அத்தனையும் படித்திடவே அறிவுனக்கு பத்தாதே.

எத்தன் நீயென்றறிவேன் ஏமாற்றிப் பிழைக்காதேபித்தன் காலடியில் பணிபவன் நானன்றோ?சித்தன்போக்கு சிவன்போக்கு சிந்தையில் பயணிப்பேன்வித்தன் இவனென்று வியக்கட்டும் என்னையுமே.

வீசியெறியும் இடந்தன்னில் விருட்சமாக வளர்ந்திடுவேன்தூசியென்று தூற்றாதே தூயவனும் நானேதான்வேசம் நீயிட்டாலும் வேதியனாய் ஆகமாட்டாய்பாசத்தில் வீழ்த்தியெனைப் பரிதவிக்க விட்டவனே…

உன்னைத்தான் நம்பினேன் உறவென்று எண்ணினேன்உள்ளத்தால் கசடென்றுஉன்நிலையைக் காட்டிவிட்டாய்தங்கமே ஆனாலும் தரமற்றுப் போய்விட்டால்பங்கமே விளையாதோ பார்ப்பவரின் கண்ணிலே.

என்னவென்று யோசித்தாய்என்னையுமே விமர்ச்சித்தாய்உண்மைநிலை உணராதுஊறினையே தந்திட்டாய்நீதந்தயிடம் பெரிதாகத்தந்தையென இருந்திட்டாய்நீசிந்தையிலே சிறுநரியாய்சிறுமைகளைச் செய்திட்டாய்

பொய்யர்களை நம்பியேபுறம்பேசத் துணிந்திட்டாய்..மெய்யதனை அறிகின்றநாளதுவும் வாராதோ?அன்றொருநாள் அழுவாயேஅப்போது இருக்கமாட்டேன்இன்றுநான் சொல்கின்றேன்இறுதியாக முடிக்கின்றேன்…

எழுதுவது : கவித்தென்றல்  சௌ.நாகநாதன்  சின்ன இரட்டையூரணி