ஆண்டலை எழுந்தோயும் காலச்சமுத்திரம்

2022

வாயாரப்பாடி, வாழ்த்துரைத்து,
வரவேற்று, ஈற்றில்
வழியனுப்பிவைத்து,
மீண்டுமொரு புதுவரவை
வழமைபோல் பார்த்துநின்று,
வந்துபோகும் ஆண்டுகளில்
வயதுகள் மட்டுமா கரைந்தோடுகின்றன…?

அன்பும், ஆசையும்
இளமையும், கனவும்,
உறவும், பிரிவும்,
இன்பமும், துன்பமும்,
மாற்றமும், ஏமாற்றமும்,
வாய்ப்பும், நழுவலும்
வரமும், சாபமும்
வாழ்வும், மரணமும்
அறிதலும், புரிதலும்
அறியாமற்கிடந்த அத்தனையும்,
இவை எல்லாவையும் அல்லவா அள்ளிக்குடித்துவிட்டுக்
காலச் சமுத்திரம் கண்முன்னே
கரைந்து கிடக்கிறது…

அலைகளாய் ஆண்டுகள் புதிதாய்
எழுந்துவந்து, கரைவரையேறி மீண்டும்
கரைந்து நின்றபோதும், காலம் எனும்
சமுத்திரம் மட்டும் அப்படியே
அலைகளில் தள்ளாடித்
தடம்புரளாமல், ஆழங்கொண்டவரை தன்னைப் புதுப்பித்துக் காத்துக்கிடக்கிறது…

அலையென வந்துபோகும் காலக் கரைகளில், நீங்களும், நாங்களும்
இன்றுள்ள நாள்வரை வாழ்வை வாழ்கின்ற பேறுகொண்டோராய்க் காத்துக்கிடக்கின்றோம், இதுவொன்றே இப்போது தெரிகின்ற உண்மை…

மீண்டுமொருமுறை காலச் சமுத்திரம் தான் படைத்தவை ஒவ்வொன்றாய்க் கட்டியணைத்துக் கரைத்துவிட முன்னதாய், இருக்கின்ற வாய்ப்புகளின் தருணங்கள் ஒவ்வொன்றிலும், வாழ்தலின் அர்த்தங்களை மனந்திறந்து புரிந்துகொள்வோம்…

குற்றமில்லா உணர்வுகளால்
குதூகலித்துக்கொள்வோம்…
கரைதனில் வந்த பேற்றைக்
குறைவில்லா எண்ணங்களால் மீண்டும் கரையமுன் உணர்ந்துகொள்வோம்…

நிச்சயம் ஏதோவொரு ஆண்டலைகளில்
வந்தவர், வந்தவை யாவையும்
தனித்தனியே விடைபெறமுன்னர், நாங்களாய் வாழும் வாழ்வின் அர்த்தங்களை அழகாக ஈடேற்றிக்கொள்வோம்…

‘வருக புது அலை,
வரைக நிறைதலை…’


எழுதுவது : காந்தள்