பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சானல் 4 தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு.
ஐக்கிய ராச்சியத்தின் அரசு தன் கைவசமிருக்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சானல் 4 ஐ விற்பனைக்கு விடத் தீர்மானித்திருக்கிறது. அந்த ஊடகம் அரசின் கைவசமிருப்பது அதன் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருப்பதாக நாட்டின் ஊடக அமைச்சர் நதீன் டொரீஸ் தெரிவித்தார்.
“நெட்பிளிக்ஸ், அமெஸான் போன்று நிகழ்ச்சிகளைத் தயாரித்து நேரடியாகக் காண்பிக்கும் நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய சானல் 4 அரசின் கைகளிலிருப்பதால் அதன் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சானல் 4 ஊடகம் அரசுக்குச் சொந்தமானது. அதற்கான செலவுகளுக்காக அரசு நிதி கொடுப்பதில்லை. 90 விகிதமான செலவுகள் நிறுவனம் காட்டும் விளம்பரங்களின் மூலம் அறவிடப்படுகிறது.
அரசின் இந்த முடிவு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு மட்டுமன்றி அதன் பார்வையாளர்கள், விசிறிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் அனைவருமே அரசின் இந்த நகர்வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
ஆட்சியிலிருக்கும் ஜோன்சனின் அரசை விமர்சித்து வருதல், அவர் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான இயக்கத்தை நடத்தியபோது அதை எதிர்த்தமை போன்றவையால் பழிவாங்கவே அதைத் தனியாரிடம் விற்பதாகச் சில எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள். இன்னொரு சாரார் வலதுசாரி அரசு தனது கோட்பாடான “பொதுவுடமைகளைக் குறைக்கவேண்டும்,” என்ற வழியில் போவதற்காக வேண்டுமென்றே சானல் 4 ஐ விற்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
அரசின் முடிவால் தாம் அதிருப்தியடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட சானல் 4 தலைமை தாம் அரசின் முடிவுக்கேற்றபடி ஆவன செய்வதாகவும் குறிப்பிட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்