கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சிக்காக தொழிலாளர்கள் நலம் சுரண்டப்பட்டதாக அமைப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
உதைபந்தாட்டத்துக்கான சர்வதேச உலகக் கோப்பைக்கான போட்டிகளை நடத்தக் கத்தாரில் செய்யப்படும் திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலம் அசட்டை செய்யப்பட்டதால மனித உரிமை அமைப்புக்கள் பலவும் சுட்டிக் காட்டி வந்தன. அங்கே பல துறைகளிலும் வேலைசெய்பவர்களிடையே அம்னெஸ்டி அமைப்பு நடத்திய ஆராய்வுகளின் பின் தொழிலாளர்கள் “அடிமைத்தனமாக” வேலைவாங்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கத்தாரின் உலகக் கோப்பை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியாகியிருக்கும் விபரங்களை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
“தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவர்கள் தொழிலாளர்களைக் கையாண்ட விதங்கள் எங்களுக்கு ஏற்பானவை அல்ல. தொழிலாளர்கள் நலத்தை உதாசீனம் செய்து அவர்களை அடிமைத்தனமாகக் கையாண்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் அவர்கள் எதிர்காலத்தில் கத்தார் அரசுக்கோ, சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளுக்கோ வியாபாரத்தில் ஈடுபடாமல் தடுக்கப்படுவார்கள்,” என்று கத்தார் உலகக் கோப்பை அமைப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
2014 ம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பை நடத்த முடிவுசெய்யப்பட்ட போதே FIFA அமைப்பு அதற்கான திட்டங்களில் தொழிலாளர்கள் நலம் பேணப்படுதல் பற்றிக் கண்காணிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆயினும், தொடர்ந்தும் அங்கே தொழிலாளர்கள் உடல், மனோ ரீதியாகப் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் தமது குறைகளை வெளியிட்டால் தண்டனை கொடுக்கப்படுவதால் அவர்கள் குரலும் ஒடுக்கபட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்