மேற்கு சஹாராவுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுமதிக்க மொரொக்கோ தயார்.

தனது நாட்டின் தெற்குப் பிராந்தியமாக மொரொக்கோ கருதும் மேற்கு சஹாராவுக்கு 2007 ம் ஆண்டு மொரொக்கோ ஒரு சுயாட்சித் தீர்வை முன்வைத்திருந்தது. “சஹாரா சுயாட்சிப் பிராந்தியம்” என்று குறிப்பிடப்படும் அத்தீர்வுத் திட்டம் மொரொக்கோவால் ஏற்கனவே ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் தீர்மானத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்பிராந்தியத்தைத் தனது காலனித்துவத்தில் கொண்டிருந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் வியாழனன்று மொரோக்கோவுக்கு விஜயம் செய்திருக்கும்போது மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

வட ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைக் கையாள முயலும் பிளிங்கன். – வெற்றிநடை (vetrinadai.com)

சுயாட்சிப் பகுதியின் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அப்பகுதிக் குடிமக்களிடம் வழங்கப்படும். அப்பிராந்தியம் அவர்களால் ஜனநாயக முறைப்படி பரிபாலிக்கப்படும். 

சுயாட்சி அரசப் பாராளுமன்றம் உள்ளூர் தலைவர்களையும், தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும். உள்ளூர் வரிகள் மூலம் அவர்கள் தமது வரவு செலவுத் திட்டத்துக்கான நிதியைப் பெற்றுக்கொள்வார்கள். நீதித்துறையின் சட்டங்கள் உள்ளூர் பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுத் தீர்ப்புகள் மொரொக்கோ மன்னரின் பெயரால் விதிக்கப்படும். சுயாட்சிப் பிராந்தியத்தில் மொரொக்கோவின் நாணயமும், கொடியுமே பயன்பாட்டிலிருக்கும்.

பொலீஸ் பாதுகாப்பு, இராணுவம், வெளிவிவகாரத்துறை ஆகியவை மொரொக்கோவின் சம்மதத்துடன் சுயாட்சிப் பிராந்தியத்தில் செயற்படுத்தப்படும் என்பதே மொரொக்கோவின் தீர்வாகும்.

“இது எங்களால் கொடுக்கப்படும் நிரந்தரத் தீர்வு அல்ல. இதை ஆரம்பமாகக் கொண்டு இரண்டு பக்கத்தினரும் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு திட்டவட்டமான தீர்வை மேற்கு சஹாரா பிராந்தியத்துக்குக் கிடைக்கச் செய்யலாம்,” என்று மொரொக்கோ குறிப்பிட்டிருக்கிறது.

“தற்போதைய நிலையில் பெரிதும் நம்பக்கூடிய, யதார்த்தமான தீர்வு இதுவாகவே இருக்கக்கூடும்,” என்று ஸ்பெயின் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த வாரம் மொரொக்கோ, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சரும் அதையே குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கு சஹாராவின் 80 % நிலப்பகுதி தற்போது மொரொக்கோவின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. அங்கே சஹ்ராவி அராபியக் குடியரசு என்ற பெயரில் தனி நாடு கோரிப் போராடிவரும் பொலிசாரியோ இயக்கத்தினர் மொரொக்கோ முன்வைத்திருக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *