சித்திரைத் திருநாள்!
சித்திரை பிறந்தாள் நித்திலத் தமிழாய்!
சீர்களைக் கொண்டே வரமான அமிழ்தாய்!
பங்குனித் திங்களுக்கு விடையைக் கொடுத்தவள்!
பல்வித வளங்களுக்கு மடையைத் திறந்தவள்!
வசந்தங்களைக் கூட்டியே வந்திடும் ஒய்யாரி!
வாழ்வினிக்க வாழ்த்த வருகின்ற சிங்காரி!
இளவேனிலுடன் இன்பங்களை அளிக்க வருபவள்!
இளமைமிகு தமிழ்த்தாயெனும் கன்னி மகளவள்!
தலை மாதமாம்! தனித்துவமான மாதமாம்!
தமிழ்ப் புத்தாண்டினில் சித்திரை மாதமாம்!
தரணியெல்லாம் நிறைந்தே இருக்கும் தரங்கிணி!
தனிச் சிறப்பையே பெற்றிருக்கும் தமிழினி!
அறுவடையைத் தந்திடவே தையெனும் மகளுக்கு
அடை மழையை அளிக்கின்ற ஐப்பசிக்கு
பயிருக்கு உயிரளிக்கும் ஆடிப் பட்டத்திற்கு
பலங்கூட்ட வந்தாள் மண்ணுக்கு சித்திரையே!
சித்திரை வந்ததால் திருநாள் இன்றே!
சிந்தையில் உள்ளொளி பெருகிடும் நன்றே!
சீர்மிகு வாழ்விது சிறந்திடும் இனிதே!
சித்திரை மகளை வரவேற்போம் இனிதே!
எழுதுவது :
மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.