பெரிய வெள்ளி, யுதர்களின் பாஸ்கு, ரமழான் நோன்பு ஒன்றிணைய, அல் அக்சா பள்ளிவாசல் பகுதியில் பெரும் மோதல்.
இஸ்ராயேலில் சமீப வாரங்களில் பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அதையடுத்துப் பாலஸ்தீன, யூத தீவிரவாதக் குழுக்கள் ஜெருசலேம் தேவாலயம், அல் அக்சா பள்ளிவாசல், யூதர்களின் முறையீட்டு மதில் ஆகியவைகள் இருக்குமிடத்தில் ஒருவரையொருவர் உசுப்பேத்தி வருகிறார்கள். பெரிய வெள்ளி, யூதர்களின் பாஸ்கு ஆகியவைகளுடன் முஸ்லீம்களின் ரமழான் நோன்பும் ஒன்றிணையும் இந்த வெள்ளி – ஞாயிறு நாட்களில் அங்கே பெரும் கலவரம் எழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தது.
யூதர்களின் தீவிரவாதக் குழுவொன்று அல் அக்சா பள்ளிவாசலருகில் யூதர்களின் சம்பிரதாயப்படி ஆடு ஒன்றைப் பலிகொடுக்கவிருப்பதாக வதந்திகள் பரவியிருந்தன. அதையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அதைத் தடுப்பதற்காக அங்கே இரவு முழுவதும் காத்திருந்தார்கள். மூன்று மதங்களுக்கும் பொதுவான அப்பகுதியில் எல்லோரும் தத்தம் மத சம்பிரதாயங்களைச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருடம் மூன்று மதங்களின் முக்கிய கொண்டாட்டமும் ஒரே சமயத்தில் ஒரே வாரத்தில் நடப்பதால் இப்பிரச்சினை எழுந்திருக்கிறது.
அல் அக்சா பள்ளிவாசலுக்குள்ளிருந்து பாலஸ்தீனர்கள் பக்கத்திலிருக்கும் யூத புனித தலமான முறையீட்டு மதிலை நோக்கிக் கற்களை எறிய ஆரம்பிக்கவே இஸ்ராயேலியப் பொலீசார் பள்ளிவாசல் பிராந்தியத்துக்குள் நுழைந்து அவர்களைத் தடுத்தனர். அதையடுத்து எழுந்த மோதல்களில் சுமார் 150 பாலஸ்தீனர்களும் மூன்று இஸ்ராயேலிய பொலீசாரும் காயமடைந்திருக்கிறார்கள்.
ரமழான் மாதத்தில் முதல் தடவையாக பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ராயேல் பொலீசாருக்கும் ஏற்பட்ட இக்கைகலப்புகளில் பொலீசார் கண்ணீர்க் குண்டுகள், ரப்பர் குண்டுகளைப் பாவித்தனர். கடந்த வாரங்களில் இஸ்ராயேலில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். அதையடுத்து பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளைக் குறிவைத்து இஸ்ராயேல் பொலீசார் நடத்திய தேடல்களின்போது 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்