ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் விடயத்தில் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் முடிவெடுப்பார்.
விக்கிலீக் இணையத்தளத்தின் ஸ்தாபகர் அசாஞ்ச் அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை இல்லை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைப் பற்றிய அசாஞ்ச்சின் எதிர்ப்பை அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் ஐக்கிய ராச்சியத்தின் உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்க மே 18 ம் திகதி வரை அவகாசம் கொடுக்கப்படிருக்கிறது. உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் அதுபற்றிய இறுதி முடிவை எடுப்பார்.
அமெரிக்காவின் இரகசியக் கோப்புக்களைத் தனது இணையத்தளமான விக்கிலீக் மூலம் பகிரங்கப்படுத்தியவர் ஆஸ்ரேலியப் பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச். அந்தக் குற்றத்துக்காக அவரை நீதிமன்றத்தில் விசாரித்துத் தண்டிக்க அமெரிக்கா முடிவுசெய்திருக்கிறது. 2010, 2011 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன அந்தக் கோப்புக்கள். அவருக்கு அதற்காக 175 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அசாஞ்ச் வெளியிட்ட கோப்புக்களின் மூலமே அமெரிக்க இராணுவத்தினர் சிலர் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கைப்பற்றியவர்களை எப்படியெல்லாம் மிருகத்தனமாகக் கையாண்டது என்பது உலகுக்குத் தெரியவந்தது. எனவே, பொதுமக்களுக்குத் தெரியவேண்டிய உண்மைகளை அவர் வெளியிட்டார் என்கிறார்கள் அசாஞ்சின் வழக்கறிஞர்கள். 25 மனித உரிமைக் குழுக்கள் ஒன்று சேர்ந்து அசாஞ்சுக்காகக் குரல் கொடுக்கின்றன. அவரை அமெரிக்காவிடம் தண்டிக்கக் கொடுப்பது மனித உரிமைகளுக்கு எதிரான, பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று அவை குறிப்பிடுகின்றன.
பிரிட்டனில் 2012 இல் வாழ்ந்த அவர் சுவீடனில் வன்புணர்வுக் குற்றம் சாட்டப்பட்டார். அக்குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ்ச், சுவீடனிடம் தன்னை ஒப்படைத்தால் அவர்கள் மூலம் தன்னை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் என்ற பயத்தில் லண்டனில் இருக்கும் ஈகுவடோர் நாட்டின் தூதுவராலயத்தில் தஞ்சம் புகுந்தார். 2020 இல் அவர் மீதான வன்புணர்வுக் குற்ற விசாரணையை சுவீடன் கைவிட்டது.
2019 முதல் அவர் பெல்மார்ஷிலிருக்கும் கடுங்காவல் சிறையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்