யேமன் அமைதிப் பேச்சுவார்த்தை வழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
ரம்ழான் நோன்பு ஆரம்பித்த தினமான ஏப்ரல் 2 ம் திகதி யேமனில் போரிடும் பகுதியினருக்கிடையே 60 நாள் போர் நிறுத்தம் ஆரம்பமாகி இதுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தின் போது ஹூத்தி இயக்கத்தினர் தவிர்ந்த மற்றப் போர் தரப்புக்கள் தம்மிடையே ஒரு நிரந்தர அமைதியை உண்டாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக யேமனின் சனா விமான நிலையத்திலிருந்து ஜோர்டானின் அம்மான் விமான நிலையத்துக்கு ஒரு போக்குவரத்துச் சேவை ஆரம்பமாகவிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக இருந்த அந்த விமானச் சேவை காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டிருக்கிறது.
சனா விமான நிலையம் போரின் ஒரு பகுதியரான சவூதி அரேபியக் கூட்டணியால் நீண்ட காலமாக உயிர்காக்கும் மருந்துகளைக் கொண்டுவரவும் பாவிக்க அனுமதிக்கப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. அதைப் படிப்படியாக அகற்றுவதற்காகவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த மூன்றாவது வாரத்தில் குறிப்பிட்ட விமான்ச்சேவை ஆரம்பிக்கப்படவிருந்தது. ஜோர்டான் தவிர எகிப்துக்கும் விமானங்கள் அங்கிருந்து பறக்க ஆரம்பிப்பதே திட்டமாகும்.
விமானச் சேவை நிறுத்தப்படக் காரணம் என்று ஒவ்வொரு தரப்பினரும் மற்றவரைக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஈரான் ஆதரவுடன் போரிடும் ஹூத்தி இயக்கத்தினர் கைவசமிருக்கும் சனாவிலிருந்து லெபனானின் ஹிஸ்புல்லா இராணுவத்தினரையும், ஈரானின் அரச படைகளில் சிலரையும் விமானத்தில் ஏற்ற முயற்சித்ததே தடைக்குக் காரணம் என்று சவூதியக் கூட்டணியின் பகுதியிலிருந்து குறிப்பிடப்படுகிறது. 104 பேர் பயணிகளாக அனுமதிக்கப்பட்டிருக்க மேலும் 60 பேர் சந்தேகத்துக்குரிய அடையாளங்களுடன் பறக்கவிருந்ததாகச் சவூதிய தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
விமானம் பறக்கத் தடை போடப்பட்டது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முரணானது என்று மறு தரப்பார் குறிப்பிடுகிறர்கள். பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்துவரும் ஐ.நா-வின் பிரதிநிதி ஹான்ஸ் குருண்ட்பர்க் தடுக்கப்பட்ட விமானச் சேவை பற்றி ஏமாற்றம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட விமானத்தில் விரைவில் மருத்துவ சேவை வேண்டி அம்மானுக்குப் பறக்கும் நோயாளிகளும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதற்கான பறக்கும் அனுமதி கிடைக்காததை அகதிகள் அமைப்புக்களும் கண்டித்திருக்கின்றன. ‘விரைவில் பறத்தலுக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்,’ என்று மட்டும் பறக்கவிருந்த யேமனின் தேசிய விமான நிறுவனமான “யேமனியா” செய்தி வெளியிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்