ரஷ்யாவின் கையில் ஐந்திலொரு பகுதி உக்ரேன் வீழ்ந்துவிட்டது, என்கிறார் செலென்ஸ்கி.

கிழக்கு உக்ரேனிலிருக்கும் லுகான்ஸ்க் பிராந்தியத்தின் நகரமான சியெவ்யோரொடொனெட்ஸ்க் தமது இராணுவத்தால் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டிருப்பதாக ரஷ்யா செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த நகரின் முக்கிய பகுதியொன்று தொடர்ந்தும் தம்மிடமிருப்பதாகவும் நகரின் வீதிகளில் தமது இராணுவ வீரர்களுக்கும், ரஷ்ய இராணுவத்தினருக்கும் நேருக்கு நேர்ச் சண்டைகள் நடப்பதாக உக்ரேனின், லுகான்ஸ்க் ஆளுனர் குறிப்பிடுகிறார்.

குறிப்பிட்ட நகரத்தின் ரஷ்ய ஆதரவாளர்கள் இவ்வருட ஆரம்பத்தில் தம்மைச் சுயாட்சிகளாக அறிவித்துத் தாம் ரஷ்யாவுடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்த டொம்பாஸ் பிராந்தியத்திலிருக்கிறது. ரஷ்ய அரசு அந்தப் பிராந்தியத்தில் முடிந்த அளவு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்காகக் அங்கே குறிவைத்துத் தாக்குதல்களை நடாத்தி வருகிறது.

எப்படியாயினும் சியெவ்யோரொடொனெட்ஸ்க் லுகான்ஸ்க் சுயாட்சிப் பகுதியின் முக்கிய நகரமாகும். அங்கே உக்ரேன் தனது படைகளில் முக்கிய பகுதியையும், ஆயுதங்களையும் கொண்டிருந்தது. அத்துட உக்ரேன் இராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையொன்றும் அங்கே இருக்கிறது.

போரில் தற்போதைய நிலையில் ரஷ்யாவி கையே ஓங்கியிருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் தனது இராணுவமும் தொடர்ந்து தாக்கப்பட்டுக் களைத்திருப்பதாகவும், நாட்டின் சுமார் ஐந்திலொரு பங்கைத் தாம் இழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்