எழு… சிறகை விரி…
பறவைகளே
பறந்து கொண்டே இருங்கள்.
கூடுகள் மட்டுமே
உங்களுக்குரியது. வலைகள் அல்ல.
உங்கள்முன்
வலைகளை விரித்துவைத்து காத்திருப்பார்கள்.
சிக்கி விடாதீர்கள்.
உயர உயர செல்லுங்கள்…
எட்டு திசைகளும்
ஒன்றுசேர காட்சியாகும்!
எல்லைகள் உங்களுக்கில்லை…
சிறகுகளை விரியுங்கள்.
வலையை விரித்து காத்திருந்தவர்கள் புலம்பிக் கிடப்பார்கள்!
தோல்வியால் வசைபாடுவார்கள்!
உன்னைப் பார்த்து ஏளனமும் புரிவார்கள்!
பரந்து விரிந்த பூமிக்கு
மொத்தக் குத்தகையாளராய் அரற்றுவார்கள்!
ஆர்பரிப்பார்கள்!
எடுபிடிகளுடன் வாழ நினைக்கும்
ஏகபோகங்களின்
கதறல் ஒலி
உனக்கு உந்து சக்தியாகட்டும்!
நீ
சுதந்திர மனிதனுக்கு அடையாளம்…
வலைகளை
அடையாளம் கண்டு வான்நோக்கி எழு!
சிலந்திகளால்
சிறுத்தைகளையா சிறைபடுத்த முடியும்!
நீ
புவியளக்கப் பிறந்துள்ளாய்…
உச்சம்தொட
தோன்றியுள்ளாய்…
சிறைக்குள்
அடைத்திட முடியாத காற்றாய் அவதரித்துள்ளாய்!
புலம்புவோர் புலம்பட்டும்!
புழுதிவாரி பூசுவோர் பூசட்டும்!
ஆயிரம் பொய்கள் சொல்லி
ஆற்றாமையால் புழுங்கட்டும்!
நீ
எப்போதும்
நீயாகவே இரு…
எழு… சிறகை விரி… மேலே மேலே செல்!
எழுதுவது : பாரதிசுகுமாரன்