இத்தாலியில் உடைந்த பனிமலையின் தாக்கம் சுவிஸ் அல்ப்ஸ் பகுதியில் தொடருமா?
ஜூலை ஆரம்ப தினங்களில் இத்தாலியின் டொலமிட்டஸ் பகுதியில் இருக்கும் மார்மொலாடா பனிமலை உடைந்து பத்துப் பேரின் உயிரைக் குடித்தது. அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் அப்பனிமலையின் இன்னொரு பகுதி சுவிஸ் பிராந்தியத்துக்குள் தொடர்கிறது. அது கண்டர்ஸ்டீக் என்ற சுவிஸ் நகரின் மேலே இருப்பதால் அந்தப் பனிமலைப் பகுதியைக் கவனமாகக் கண்காணித்து வருகிறார்கள் சுவிஸ் புவியியலாளர்கள்.
சுவிஸ் அல்ப்ஸ் மலைத்தொடரையொட்டியிருக்கும் கண்டர்ஸ்டீக் நகரம் சுற்றுலாப் பயணிகளிடையேயும், பனியில் விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு இடையேயும் மிகவும் பிரசித்தி பெற்றது. உயரத்தில் இருக்கும் நீர் நிலைகளும், அழகான மரக்குடிசைகளையும் கொண்டது அந்த நகரம்.
புவியின் காலநிலை மாறுதலால் நகரின் மேலாக இருக்கும் பனிமலைகள் வருடாவருடம் ஒரு மீற்றருக்கும் அதிகமாக நகர்கின்றன என்கிறார்கள் புவியியலாளர்கள். அடிக்கடி அந்த மலையிலிருந்து மிகப் பெரிய பனிப்பாளங்களும் உடைந்து விழுந்து வருகின்றன. அந்த மலை பெயர்ந்து கீழிருக்கும் மக்கள் வாழும் பகுதியில் விழுமா என்பது பற்றித் தெளிவாகக் கணிக்க முடியவில்லை. அப்படியொரு ஆபத்து நெருங்கும் பட்சத்தில் 48 மணிகளுக்கு முதல் அதை எச்சரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்