பிரிட்டன் துறைமுகத்தின் தொழிலாளர்கள் தமது எட்டு நாள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தார்கள்.
வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் நெருக்கப்பட்டு அதிக ஊதியம் கோரும் பிரிட்டனின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலொன்றான ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிரிட்டனை வியாழனன்றும், சனியன்றும் ஸ்தம்பிக்க வைத்தது. ஞாயிறன்று துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
பிரிட்டனின் கிழக்கிலிருக்கும் மிகப்பெரிய துறைமுகமான Felixstowe இல் வேலை செய்யும் தொழிலாளர்கள் விலையேற்றங்கள், பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்து தமது அதிருப்தியைக் காட்ட 8 நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்தத் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகள் பிரிட்டனின் பொருளாதாரத்தின் நாளாந்த இயக்கத்துக்கு முகவும் முக்கியமானவை. எனவே, இந்த வேலைநிறுத்தத்தின் விளைவை நாட்டின் தொழிற்துறை கணிசமாக உணரும் என்று எண்ணப்படுகிறது.
Felixstowe நிறுவனத்தின் உயர் நிர்வாகியொருவர் 7% ஊதிய அதிகரிப்பும், 500 பவுண்டுகளும் தாம் கொடுத்திருப்பதாகவும், தமது ஊழியர்களில் ஒரு பகுதியினர் அதை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆயினும், பெரும்பாலானோர் அதை ஏற்காததால் ஏற்படப்போகும் நிலைமையை எதிர்கொள்ள தாம் மாற்று ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
துறைமுகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 29 ம் திகதி வரை தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்