ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐரோப்பிய விசாவுக்குக்கான வழி கரடுமுரடாக்கப்படலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் ஒன்றுசேர்ந்து ஒன்றியத்துக்குள் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களுக்கு விசாக்கள் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தன. அந்தக் கோரிக்கைக்கு ஒன்றிய நாடுகளின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. பதிலாக, தற்போது ஒன்றியத்தின் தலைமை நாடான செக் குடியரசு மாறுதலான திட்டமொன்றை முன்வைத்திருக்கிறது.
புதனன்று கூடவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் மாநாட்டில் ரஷ்யர்களுக்கு ஐரோப்பாவுக்குள் நுழையும் பாதை கரடுமுரடாக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 2007 இல் ரஷ்யாவுடன் செய்துகொண்ட விசா ஒப்பந்தத்தை ஒன்றியம் குப்பையில் போடவிருக்கிறது. அதன் விளைவால், ரஷ்யர்கள் விசா விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்படுவதுடன் அவைகளைக் கையாளும் காலம் அதிகரிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது விமானத்தொடர்புகளை ரஷ்யாவுடன் நிறுத்திக்கொண்ட பின்னர் இதுவரை நிலத்தொடர்பு வழியாக ஒரு மில்லியன் ரஷ்யர்கள் ஒன்றியத்துக்குள் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கிறார்கள். எஸ்தோனியா, பின்லாந்து நாடுகளுக்கு வரும் அவர்கள் அங்கிருந்து மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்களில் பயணிக்கிறார்கள்.
எஸ்தோனியா, லித்வேனியா, லத்வியா, பின்லாந்து, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகள் ரஷ்யர்களுக்கான விசாக்களை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றன. பெருமளவில் ரஷ்யச் சுற்றுலாப் பயணிகள் வரும் கிரீஸ், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் கதவுகளை மூட விரும்பவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்