மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்ட சுமார் 1,000 அகதிகளை நாட்டுக்குள் விட இத்தாலிய அரசு மறுப்பு!
ஆபத்தான படகுகள் மூலமாக ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவில் தஞ்சம் புக வருடாவருடம் முயற்சிப்பவர்களில் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி இறப்பதுண்டு. அப்படியான படகுகளுக்கு உதவி அகதிகளைக் காப்பாற்றுவதில் சில மனிதாபிமான அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. அப்படிக் காப்பற்றப்பட்டு மூன்று கப்பல்களில் சுமார் 1,000 அகதிகள் மத்தியதரைக்கடலிலேயே இருக்கிறார்கள்.
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் மால்டாவின் கடலெல்லைக்குள் காப்பாற்றப்பட்டனர். அவர்களுக்கு உதவும்படி கப்பல்களை இயக்கும் மனிதாபிமான அமைப்புகள் மால்டாவிடம் கேட்டும் மால்டா அரசு பதிலளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது. அதைப் பற்றிய விவாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறவாதப் பிரச்சினையாக மாறியது. பிரான்ஸ் அகதிகளுக்கு உதவும்படி இத்தாலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இத்தாலியில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்திருப்பது வலதுசாரித் தேசியவாதக் கூட்டணி. கூட்டணியின் கட்சிகள் எல்லாமே நாட்டுக்குள் வரும் அகதிகளைத் தடுப்பது என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் நின்றவையே. அகதிகள் கப்பலொன்றில் முழுக்கர்ப்பிணிகள், 60 குழந்தைகள் உட்படச் சுமார் 572 பேர் இருப்பதாக அதனை பராமரிக்கும் எல்லையில்லாத மருத்துவர் அமைப்பைச் சேர்ந்த ரிக்கார்டோ கட்டி குறிப்பிட்டு அவர்களுக்கு உதவுமாறு இத்தாலியிடம் வேண்டினார்.
அகதிகள் வாழும் மூன்று கப்பல்களில் இரண்டு நோர்வே கொடியையும், மூன்றாவது ஜேர்மனியக் கொடியையும் கொண்டது. இத்தாலிய அரசு அந்த நாடுகளின் ரோம் தூதுவராலயங்களைத் தொடர்புகொண்டு அகதிகள் அந்த இரண்டு நாடுகளின் பொறுப்பே என்று தெரிவித்திருக்கிறது. நோர்வேயும், ஜேர்மனியும், சர்வதேசச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி இத்தாலி அவர்களுக்கு உதவுவது கடமை என்று குறிப்பிட்டிருக்கிறது. பிரான்ஸும் அதையே தெரிவித்திருக்கிறது.
ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் இத்தாலிய அரசை வற்புறுத்தியதால் கப்பல்களிலிருக்கும், சுகவீனமானோர், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுடனான பெண்கள் மட்டும் இத்தாலியில் இறங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களை மீண்டும் கடலுக்குப் போகச் சொல்லிவிட்டது இத்தாலிய அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்