தயாரிக்கும்போது கரியமிலவாயுவை வெளியேற்றும் பொருட்கள் மீது வரி அறவிட முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலுமொரு நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது ஒன்றியம். வெளியேயிருந்து ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கரியமிலவாயுவை அதிகளவில் வெளியேற்றும் பொருட்கள் மீது அதற்கேற்ற அளவில் வரிகளை விதிக்க முடிவுசெய்திருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்களும் தமது கரியமிலவாயு வெளியிடலைக் குறைக்கக் கட்டாயப்படுத்தப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயிருக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே ஒன்றியத்தின் கரியமிலவாயுச் சந்தையில் தமது மாசுபடுத்தலுக்கு ஏற்றபடியான சான்றிதழ்களை வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இனிமேல் ஒன்றியத்துக்குள் இருக்கும் நிறுவனங்களும் தமது தயாரிப்புகளால் வெளியேற்றப்படும் கரியமிலவாயு அளவுக்கான சான்றிதழ்களை வாங்கவேண்டும்.
இந்த நடவடிக்கையானது அதிக கரியமிலவாயுவை வெளியேற்றித் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது அதிக வரியைச் சுமத்தும் அதேசமயம் அவர்கள் வெளிநாடுகளில் சூழலை அழுக்காக்கித் தயாரித்து மலிவான விலையில் தமது பொருட்களை ஒன்றியத்துக்குள் விற்காமல் தடுக்கும். தமது கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கும் நிறுவனங்களுக்கு அப்பொருட்களை ஒன்றியத்துக்குள் விற்கும் சாத்தியங்களை அதிகப்படுத்தும்.
சாள்ஸ் ஜெ. போமன்