ஊதிய உயர்வு கோரி வெவ்வேறு துறைகளிலும் வேலை நிறுத்தங்கள், பேச்சுவார்த்தை நடத்த மறுக்கும் ரிஷி சுனாக்.
பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்த வேலை நிறுத்தங்கள் தொடர்கின்றன. போக்குவரத்து, மக்கள் ஆரோக்கியம் உட்பட்ட முக்கிய துறைகளில் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடந்து வருகின்றன. பண்டிகைக் காலத்தையொட்டி நாட்டின் விமான நிலையங்களில் கடவுச்சீட்டுகளைச் சரிபார்க்கும் உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
உக்ரேன் போரின் பக்கவிளைவாக ஏற்பட்ட விலையேற்றங்கள் நாட்டில் கணிசமான பணவீக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எரிசக்தி, உணவுப்பண்டங்கள் ஆகியவைகளின் விலையுயர்வுகளின் விளைவால் நவம்பரில் அது 10, 7 விகிதமாக இருந்தது. விலையுயர்வுகள் தமது வாக்கைத்தரத்தைப் பெருமளவு பாதித்து வருவதாகவும் அதை எதிர்கொள்ள அரசு தமக்கு உதவவில்லை என்றும் நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
நிலைமையைத் தான் அறிவதாகக் குறிப்பிடும் பிரதமர் ரிஷி சுனாக் வேலை நிறுத்த நடவடிக்கைகள் தன்னைக் கவலைப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார். ஆயினும், வேலை நிறுத்தம் செய்யும் பொதுத்துறைகளின் பிரதிநிதிகளுடன் தான் பேரம் பேசத் தயாராக இல்லை என்றும் அப்படியான நடவடிக்கை எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும் சாதிக்கிறார். பொது மக்களிடையே வேலை நிறுத்தங்களுக்குப் பலமாத ஆதரவு இருப்பதை கருத்துக் கணிப்பீடுகள் காட்டுகின்றன.
ஏறகனவே அடையாள வேலை நிறுத்தங்கள் செய்த பிரிட்டிஷ் தாதியர்கள் தமது கோரிக்கைகள் எதற்கும் நிர்வாகம் செவிகொடுக்கவில்லை என்பதால் மீண்டும் வேலைநிறுத்தங்களை நடத்தவிருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து நிர்வாகமும் தமது தாதியர்களுடையே கோரிக்கைகளைக் கேட்காததால் அங்கேயும் வேலை நிறுத்தத் திகதிகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. ஆரோக்கியத் துறையில் அவசரகால வாகனச் சாரதிகளும் தமது வேலை நிறுத்தங்களை அறிவித்திருக்கிறார்கள்.
மக்கள் ஆரோக்கியத் துறையில் முடிந்தளவு அதிக அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அதன் வெவ்வேறு கிளையினரும் ஜனவரியில் வேலை நிறுத்தங்களை அறிவித்திருப்பதாக அத்துறையின் அமைச்சர் ஸ்டீவ் பார்க்லி குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே பெரும் அழுத்தத்தை எதிர்நோக்கியிருக்கும் அத்துறையானது வரவிருக்கும் வேலைநிறுத்தக்காலத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமா என்று தான் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்