பதவியிலிருந்தும் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நியூசிலாந்தின் பிரதமர்!
2017 இல் நாட்டின் அதுவரையிலான இளம் பிரதமராகப் பதவியேற்ற ஜசிந்தா ஆர்டென் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அரசியல் வாழ்க்கையைத் துறந்துவிட முடிவுசெய்திருப்பதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தற்போது 42 வயதான ஆர்டென் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராகப் பதவியேற்றவுடன் நாட்டின் பிரதமர் பதவியைக் கைப்பற்றி குடிமக்களிடையே நீண்ட காலம் நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தவர். ஒரு ரொக் இசைக்கலைஞர் தன்னைச்சுற்றி உண்டாக்கும் ஆர்வத்தைப் போல மிளிர்ந்தார் என்று அதை “ஜசிந்தாமேனியா” என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.
கடந்த தேர்தலில் ஆர்டெனின் கட்சி நின்றபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் சமீப காலத்தில் அவருக்கான ஆதரவு குறைந்திருக்கிறது. ஆயினும்கூட அவர் இப்படியான ஒரு முடிவை எடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதை ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் காணப்படும் பிரதிபலிப்புகள் வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்தும் அரசியலில் இருக்கும் ஆர்வம், உற்சாகம் போன்றவை தனக்கு இல்லாமல் போயிருப்பதே எடுத்த முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2019 இல் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை அவர் அணுகிய விதம் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உயர்மட்ட அரசியல்வாதியாக இருந்துகொண்டு ஒரு பெண்ணால் இயல்பாக வாழமுடியும் என்று காட்டி உலகளவில் பலரையும் அவர் கவர்ந்தார். பிரதமர் ஒருவர் கர்ப்பிணியாக இருந்து, பிள்ளை பெற்றுக்கொண்டு, அதற்கான விடுமுறையையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பதையும் நடத்தையில் காட்டியவர் அவர்.
அரசியல்வாதி ஒரு சாதாரண மனிதர் என்பதைக் காட்டுவதுபோலவே ஆர்டென் எப்போதும் இயங்கி வந்தார். தனது பதவி விலகலையும் அவர் கண்கலங்கியபடி பகிரங்கப்படுத்தினார்.
கொரோனாக்காலக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் பணியின் அமைச்சராக இருந்த கிரிஸ் ஹொப்கின்ஸ் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியால் தலைமைப்பதவிக்கு முழுமையான ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அதையடுத்து அவர் நாட்டின் பிரதமர் பதவியையும் ஏற்றுக்கொள்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்