டொங்கோ தீவுகளுக்கு வெளியே ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் நாட்டினருக்கு சுனாமி எச்சரிக்கை!
பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் சிறு தீவுகளைக் கொண்ட நாடான டொங்கோவுக்கு வெளியே கடலுக்குக் கீழேயிருக்கும் எரிமலையொன்று வெடித்திருக்கிறது. அதையடுத்து பல மீற்றர் உயர அலைகள் உண்டாகியிருப்பதால் டொங்கோவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
176 தீவுகளைக் கொண்ட டொங்கோவின் 52 தீவுகளில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீவு மக்கள் திகிலுடன் தீவுகளின் உயரமான இடங்களை நாடி ஓடித் தப்பிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டொங்கோவின் தலைநகருக்கு வெளியே சுமார் 60 கி.மீ தூரத்தில் கடலடியிலிருக்கும் அந்த எரிமலை சமீப வருடங்களில் அடிக்கடி வெடித்திருக்கிறது. கடந்த ஒரு நாளில் இரண்டு முறை அது வெடித்துக் கடலலைகளை உண்டாக்கியிருக்கிறது. எரிமலைச் சிதறல்கள், புகை போன்றவை கடல்மட்டத்திலிருந்து 20 மீற்றர் உயரம் வரை எழுந்ததாகப் புவியியல் அவதான நிலையங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பிஜி தீவுகள், சமுவா தீவுகள், நியூசிலாந்து உட்பட பசுபிக் சமுத்திரத்தின் தென்பாகம் முழுவதும் சுனாமி அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளியன்று மாலையிலும், சனியன்றுமாக இரண்டு தடவைகள் அவ்வெச்சரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
டொங்கோவின் அரசன் ஆறாவது தூபுவை உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்திலிருந்து கடற்கரையிலிருந்து தூரத்திலிருக்கும் இடத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். டொங்கோவின் 100,000 குடிமக்கள் பாவிக்கும் கிணறுகளின் நீர் எரிமலையின் நச்சுக்களால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் தலை நகரையடுத்து 1,2 மீற்றர் உயரமான அலைகள் தென்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்