சிறீலங்கா ஜனாதிபதி நாடு முழுவதற்குமான அவசரகால நடவடிக்கைச் சட்டத்தைப் பிரகடனம் செய்திருக்கிறார்.
வியாழனன்று சிறீலங்காவின் தலைநகரான கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் எழுந்திருக்கும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு சீரழியாமல் இருக்குமுகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வெள்ளியன்று நாடு முழுவதற்குமான அவசரகால நடவடிக்கையைப் பிரகடனம் செய்திருக்கிறார். அதன் மூலம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களைக் கைது செய்து நீண்டகாலம் விசாரணையின்றிப் பாதுகாப்புச் சிறையில் வைக்க இராணுவத்தினருக்கும், பொலீசாருக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சிறீலங்காவின் பொருளாதாரம் கீழ்நோக்கி விழும் கல்லாக மாறியிருக்கிறது. நீண்டகாலமாக சீனா, இந்தியா உட்பட்ட நாடுகளில் வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை கட்ட வழியின்றி நாடு அன்னிய நாட்டுச் செலாவணிக்காகத் தவிக்கிறது. விளைவு படிப்படியாக எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாகச் சர்வதேசத்தைத் தனது கடும் பிடியில் வைத்து வாட்டிய கொரோனாத்தொற்றுக்களும் அதனால் சிறீலங்காவின் முக்கிய வருமானம் தரும் துறையான சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு நாடு வருமானமிழந்ததும் நிலைமையைப் பாதித்தன. ஏற்பட்டிருக்கும் ரஷ்ய – உக்ரேன் போரால் உண்டாகியிருக்கும் விலைகளின் உயர்வும், எரிபொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் சேர்ந்து சிறீலங்காவின் ஏற்கனவே பாரதூரமான நிலையைப் படுமோசமாக்கியிருக்கின்றன.
எரிபொருட்கள் இல்லாததாலும், பருவ மழை தவறியதால் ஏற்பட்டிருக்கும் வறட்சியும் சேர்ந்து நாட்டு மக்களுக்கான மின்சார வினியோகத்தைப் பெரிதும் குறைத்திருக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் தினசரி 12 மணித்தியால மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவைகளால் கோபமுற்ற மக்கள் கூட்டம் வியாழனன்று மாலை ஜனாதிபதி கோட்டாபாயவின் தனிப்பட்ட வீட்டை முற்றுக்கையிட்டு “பதவி விலகும்படி,” கோஷமிட்டனர். அந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு சாரார் வன்முறையிலும் இறங்கினர். இராணுவமும், பொலீசாரும் மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுப் பலர் காயமடைந்தனர்.
தனது வீட்டைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டே ஜனாதிபதி நாட்டில் அவசரகால நடவடிக்கையைப் பிரகடனம் செய்திருக்கிறார். மேற்கு சிறீலங்காவில் ஊரடங்குச்சட்டமும் வெள்ளியன்று மாலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. சக அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும், “நடந்தது தீவிரவாதச் செயலல்ல, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பசி, பட்டினியால் வாடுகிறவர்களின் கோபத்தின் வெளிப்பாடே,” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்