புத்தினுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடும் மக்ரோனைச் சாடுகிறார் போலந்து பிரதமர்.
ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வரும் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனை போலந்தின் பிரதமர் மத்தேயுஸ் மொராவெக்கி. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான தடைகளைப் போட்ட பின்னும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டு வரும் மக்ரோனிடம் அவர், “மக்ரோன் அவர்களே எத்தனையோ தடவைகள் நீங்கள் புத்தினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினீர்களே, எதைச் சாதித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இவ்வருட ஆரம்பத்திலிருந்து இதுவரை 16 தடவைகள் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசியிருப்பதாக எலிஸே மாளிகை விபரங்கள் குறிப்பிடுகின்றன.
“ஹிட்லர், ஸ்டாலின், போல் பொட் ஆகியோருடன் உங்களால் பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா?” என்று மொராவெக்கி குறிப்பிட்டு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதான தடைகளை மேலும் அதிகரிக்கவேண்டும், புத்தினின் போர் இயந்திரத்தைச் செயற்படாமல் நிறுத்த வேண்டும் என்று கோரினார்.
தனது உரையில் அவர் ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான தடைகளைக் கொண்டுவரவும், ரஷ்யாவிடம் எரிவாயுவை வாங்குவதை முற்றாக நிறுத்துவதற்கும் தடையாக இருப்பதாகப் ஜேர்மனியையும் சாடினார். அத்துடன் புத்தின் நீண்ட காலமாகவே தனது ஆக்கிரமிப்புக்களில் ஈடுபட்டு வரும்போது அவரைத் தடுக்காத ஜேர்மனியின் முன்னாள் பிரதமர் அஞ்செலா மெர்க்கல் உக்ரேனுடனான போர் ஆரம்பித்தது முதல் மௌனமாக இருப்பது குறித்தும் கோபத்துடன் சாடினார்.
ரஷ்ய இராணுவத்தால் கைவிடப்பட்ட புச்யா நகரில் காணப்பட்ட நிலைமை அங்கே போர்க்குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்திருப்பதாக உலகத் தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிரான்ஸ் ஜனாதிபதியும் அங்கிருந்து வெளிவந்திருக்கும் படங்கள், சாட்சியங்களால் விசனப்பட்டு ரஷ்யாவிடமிருந்து எரிபொருள், நிலக்கரியைக் கொள்வனவு செய்வது நிறுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையைத் தற்சமயம் வகிக்கும் பிரான்ஸ் தனது நிலையைப் பயன்படுத்தி இச்சமயத்தில் புத்தினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திப் போரை முடிவுபெறச் செய்யவேண்டும் என்று ஐரோப்பாவுக்கான பிரெஞ்ச் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ரஷ்யாவின் மீதான கடுமையான நடவடிக்கைகள் பற்றிய பிளவுகள் இருப்பதை அவர் மறுத்தார்.
ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையை புச்யா குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷ்யா கூட்டியபோது உக்ரேன் ஜனாதிபதியும் தொலைத்தொடர்பு மூலம் பங்குகொண்டார். ரஷ்யாவோ தமது நாட்டின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டுக்கள் வீசப்படுவதாகக் குறிப்பிட்டு போர்க்காலக் குற்றங்களில் தாம் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்